திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே 15 வயதான பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். அவரது இரண்டாவது மனைவிக்கு 2வதாக பிறந்த 15 வயதான மகளை, 2024ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனை நடந்தது.
அதில், 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கருவில் உருவான டிஎன்ஏ மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏ ஒத்துப்போனது நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், இன்று அளித்த தீர்ப்பில், “குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும், அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர். சொந்த மகளையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு இந்த கோர்ட் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது” என தெரிவித்துள்ளார். கடந்த 11 நாட்களுக்கு முன்பு இதே நீதிமன்றத்தில், மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

