×

அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: சேலத்தில் அமித்ஷாவுக்கு எடப்பாடி பதிலடி

 

சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று, அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்து உள்ளார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், நேற்று எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயண பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: சேலம் மாவட்டம், அதிமுகவின் கோட்டை. முதல் முறையாக இங்கு எழுச்சி பயணம் மேற்கொண்டுள்ளேன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, இங்கு கூடியிருக்கும் கூட்டமே முழு வெற்றியை தரும் என்பதற்கு சாட்சி. இங்கு மட்டுமல்ல, 234 தொகுதிகளில் அதிகப்படியான இடங்களில், அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமைவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும். இந்த அரசு வழங்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளில், ஒருவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிப்பதில் ஏன் தயக்கம்?. அதிமுக கூட்டணி எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கிராமத்தில் இருந்து வந்த எடப்பாடியால் என்ன செய்ய முடியும் என நினைக்கிறார்கள். வலுவான கூட்டணியை அமைப்போம். 234 தொகுதிகளில் அதிக தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். அந்த ஆட்சி அமைந்ததும், 100 நாள் வேலை திட்டத்தை தற்போது ஒன்றிய அரசு 125 நாளாக உயர்த்தியுள்ள நிலையில், 150 நாளாக உயர்த்துவோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசிய நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று, அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்து உள்ளார்.

 

Tags : AIADMK ,Edappadi ,Amit Shah ,Salem ,Union Minister ,Pudukkottai ,National Democratic Alliance government ,Tamil Nadu ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...