×

அனைத்து மாவட்டங்களில் குறள் வார விழா: மெரினா கடற்கரையில் தமிழோசை நிகழ்ச்சி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் குறள் வாரம் நிகழ்ச்சிகள் நடைபெறும். சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 10ம் தேதி ஜேம்ஸ் வசந்தன் தமிழோசை நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வோர் ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்படும் எனப் பெருமிதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும்பொருட்டு, 2026ம் ஆண்டு குறள் வாரவிழா கொண்டாடிட ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வகையில், திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சி, குறள் சார்ந்த ஓவியப் போட்டி, குறள் ஒப்பித்தல் போட்டி (பொதுமக்களுக்கு மட்டும்) கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம், படத்தொகுப்பு, ஒளிப்படப் போட்டி, திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் குறளாசிரியர் மாநாடு மற்றும் குறள் வினாடி வினா, ஜேம்ஸ் வசந்தன் தமிழோசை நிகழ்ச்சி ஆகியவை குறள் வார விழா நிகழ்ச்சிகளாக நடைபெற உள்ளன.

சேலம், திருச்சி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற உள்ளது. கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம், படத்தொகுப்பு, ஒளிப்படப் போட்டி அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெற உள்ளது. மதுரை, ஈரோடு, நாமக்கல், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

சென்னை, மெரினா கடற்கரையில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை ஜேம்ஸ் வசந்தன் தமிழோசை நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது. திருப்பூரில் 21ம் தேதி புதன்கிழமை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் (அனைத்து நிலைகளிலும்) ஆசிரியர்கள் (அனைத்து நிலைகளிலும்) பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு (ம) குறள் வினாடி-வினா நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது. திருப்பூரில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்குபெறும் பங்கேற்பாளர்களை தெரிவு செய்திட ஏதுவாக திருக்குறள் சார்ந்த முதல்நிலைத் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் முதல் 30 மதிப்பெண்களை பெறுவோர் திருப்பூரில் வரும் 21ம் தேதி புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு பெறுவர். குறள் வினாடி வினாவுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பின்வரும் விரைவுத் துலங்கள் குறியீடு வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Karal ,Marina Beach ,Tamil ,Nadu ,Chennai ,TAMIL NADU GOVERNMENT ,JAMES ,METROPOLITAN ,MUNICIPAL ,COAST ,MARINA, CHENNAI ,Government of Tamil Nadu ,
× RELATED ஐபிஎல்லில் விளையாடும் வங்கதேச வீரர்...