×

மெக்சிகோவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; ‘சைரன்’ ஒலி பீதியால் ஜனாதிபதி வெளியேற்றம்: கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை 7.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரேரோ மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகருக்குத் தென்மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில், 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் நாட்டின் ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், புத்தாண்டின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிலநடுக்கத்திற்கான அபாய ஒலி எழுந்ததால் ஜனாதிபதி மாளிகை உடனடியாக காலி செய்யப்பட்டு, ஜனாதிபதி உட்பட அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 850க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சான் மார்கோஸ் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 56 வயதுடைய பெண் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல் மெக்சிகோ சிட்டியில் கட்டிடத்தை விட்டு வெளியேறும் போது கீழே விழுந்ததில் 67 வயதுடைய முதியவர் ஒருவரும் பலியானார்.

மெக்சிகோ சிட்டியில் மட்டும் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர். சான் மார்கோஸ் நகரில் சுமார் 50 வீடுகள் தரைமட்டமானதுடன், பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில்பன்சிங்கோ நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றிலும் சேதம் ஏற்பட்டதால் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அகாபுல்கோ மற்றும் மெக்சிகோ சிட்டி விமான நிலையங்களில் லேசான சேதங்கள் ஏற்பட்டதாகவும், நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Mexico ,Mexico City ,
× RELATED ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த...