×

எல்லாபுரம் ஒன்றியம் தொளவேடு ஊராட்சியில் எலும்பு கூடான மின் கம்பங்கள்: உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்

ஊத்துக்கோட்டை, ஜன.3: எல்லாபுரம் ஒன்றியம் தொளவேடு ஊராட்சியில் சாலையோரத்தில் உள்ள மின் கம்பங்கள் சிமென்ட் காரைகள் பெயர்ந்த எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில், திடீரென காற்று அடித்தால் மின் கம்பங்கள் முறிந்து விழுந்து உயிர் பலியை ஏற்படுத்தும் என்ற அச்சத்திலேயே வாகன ஓட்டிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் அரசு, தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், மாணவ – மாணவிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளிகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், இங்குள்ள சாலையின் வழியாக செல்வார்கள்.

மேலும், இங்குள்ள கிராம சாலையின் ஓரங்களில் உள்ள மின் கம்பங்களில் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் உடைந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. மேலும், சில நேரங்களில் பலமாக காற்று வீசும்போது மின் கம்பம் உடைந்து விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவு உள்ளதால் அடிக்கடி விவசாயிகள் இந்த வழியாக சென்று வருவார்கள் காற்று வீசி இந்த மின் கம்பங்கள் உடைந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, உடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: கிராம மக்களாகிய நாங்கள் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதிக்கு சைக்கிளிலும், பைக்குகளிலும் சென்று தான் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். எங்கள் பிள்ளைகள் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு நடந்தே செல்ல வேண்டி உள்ளது. அந்த நேரத்தில், திடீரென காற்றடித்து சேதமடைந்த மின் கம்பம் கீழே விழுந்தால் உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இங்குள்ள கிராம சாலையில் 4 கம்பங்கள் சேதமடைந்தும், சிமெண்ட் சிலாப்புகள் உடைந்தும் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என பாலவாக்கம் மின்வாரிய அலுவலகத்திலும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் ஊராட்சி சார்பில் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Tholavedu panchayat of ,Ellapuram union ,Uthukottai ,Tholavedu panchayat ,
× RELATED மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வடமாநிலத்தவர் பரிதாப பலி