×

மூலத்தை மூலத்திலேயே வெல்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஜீரண மண்டலத்தின் கடைசிப் பகுதியான ஆசனவாயில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னைதான் மூலம் ஆகும். அதன் அறிகுறிகளையும் நவீன சிகிச்சை முறைகளையும் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இரைப்பை, குடல் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர்.கண்ணன்.

மூலம் என்றால் என்ன? அதன் வகைகள் என்னென்ன?

மூலம் என்பது ஆசனவாயில் உள்ள ரத்த நாளங்களில் உருவாகும் வீக்கம். இதனை உள் மூலம், வெளி மூலம் என இருவகைப்படுத்தலாம்.

மூலம் எதனால் ஏற்படுகிறது?

ஆசனவாயில் உள்ள ரத்த நாளத்தில் அழுத்தம் ஏற்படுவதால் மூலம் ஏற்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், பல நாட்களாக சரி வர கவனிக்காமல் விடப்பட்ட மலச்சிக்கல்தான். பரம்பரை பரம்பரையாக ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயின் துணை மற்றும் இனணப்புத் திசுக்கள் பலவீனமாக இருந்தால், சிலருக்கு மூலம் வரலாம். அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தாலோ அல்லது தொடர்ந்து குறைந்த அழுத்தப் பகுதியில் (விமானத்தில்) பணிபுரிபவர்களுக்கு மூலம் வரலாம். நாட்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் உடல் பருமனால் மூலம் வரலாம்.

மலக்குடல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயினாலும் ஆசனவாயில் ரத்த நாளங்களில் அழுத்தம் உண்டாக்கி மூலம் வரலாம். பெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் வயிற்றின் கீழ்ப்பகுதியில் அழுத்தம் அதிகமாவதாலும் மலச்சிக்கல் மற்றும் progestone ஹார்மோன் காரணமாகவும் மூலம் வரலாம்.நாம் பெரும்பாலும் நின்று கொண்டே இருப்பதால், ஆசனவாயை நோக்கி உடல் உறுப்புகள் நேரடியாக அழுத்துவதால், ஆசனவாய் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி மூலம் உண்டாகலாம்.

மூலத்தை எத்தனை நிலைகளாகப் பிரிக்கலாம்?

மூலத்தை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம் அவை:

முதல் நிலையில் ரத்தப்போக்கு இருக்கும். தசை, வெளித்தள்ளாது. வலி இருக்காது.
இரண்டாம் நிலையில் மூலம் வெளியே வந்து தானாகவே உள்ளே சென்று விடும்.
மூன்றாம் நிலையில் வெளியே வரும் மூலத்தை கையால் உள்ளே தள்ள முடியும்.
நான்காம் நிலையில் மூலம் ஆசனவாய்க்கு கீழே தள்ளிய நிலையிலேயே இருக்கும்.

மூலத்தின் அறிகுறிகள்

மலம் கழிக்கும் போது ஆசனவாயில் வலியற்ற ரத்தப்போக்கு ஏற்படுதல்.

அரிப்பு, எரிச்சல் மற்றும் வீக்கம்

ரத்தம் உறைந்து போய் கட்டியாகி விட்டால் அதனால் வலி வரும்.

மூலநோயை எவ்வாறு அறிந்து கொள்வது.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

முதல் நிலை மூலம்

மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும். அதிக நார்ச்சத்து உள்ள உணவை (காய்கறிகள், பழங்கள் மற்றும் கோதுமை) அதிகமாகவும் மாவுச்சத்து உள்ள உணவை குறைவாகவும், மேலும் அதிகளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கலாம். வீங்கி முடிச்சு போல் உள்ள ரத்தக் குழாய்களை sclerotherapy அல்லது Laser மூலம் சுருங்கச் செய்யலாம்.

இரண்டாம் நிலை: மலச்சிக்கலை தவிர்த்து, மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் சரி செய்யலாம். மேலும் வீங்கிய நிலையில் உள்ள ரத்த நாளங்களை லேசர் மற்றும் infrared coagulation, Scierotherapy, Rubber Band ligation Technique மூலமாகவும் சுருங்கச் செய்யலாம்.

மூன்று மற்றும் நான்காம் நிலை: மூலம் இதனை மருந்தால் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை மூலமாகவும் லேசர் மூலமாகவும் மற்றும் அதிநவீன ஸ்டாப்ளர் சிகிச்சை மூலமாகவும் மட்டுமே குணப்படுத்த முடியும்.

லேசர் சிகிச்சை என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன?

லேசர் மூலமாக எல்லா நிலை மூலத்தையும் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலை மூலத்திற்கு ( முதல் மற்றும் இரண்டாம் நிலை) லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை செய்வதால், ரத்த இழப்பு இருக்காது, வலியோ மிக மிகக் குறைவு. மருத்துவமனையில் ஒருநாள் மட்டும் இருந்தால் போதுமானது. விரைவில் பழைய நிலைக்கு திரும்பி நாம் அன்றாட வேலைகளை கவனிக்கலாம்.

பொதுவாக லேசர் சிகிச்சைக்கு பிறகு கடைபிடிக்க வேண்டியவை

கடினமான வேலைகள் செய்வதை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டாப்ளர் சிகிச்சை என்றால் என்ன?

மற்ற அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டாப்ளர் போன்று. அல்லாமல், மூலத்திற்காகவே, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன கருவிதான்ppho3 எனப்படும் Haemorrhoidal stapler ஆகும். இந்த கருவி மூலமாக ஆசனவாயில் உள்பகுதியில் Dentate Lineக்கு மேல் மூலத்துடன் கூடிய சதையை எடுத்த பிறகு அந்த இடத்தை ஸ்டாப்ளர் பின்னால் இணைப்பதுதான் இதன் சிறப்பு அம்சமாகும்.

இந்த சிகிச்சையின்போது ஆசனவாய்க்கு மேலுள்ள தசைகளை அதிகம் வெட்டாமல் வேண்டிய அளவு மட்டுமே வெட்டுவதால், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் சக்தி ஆசனவாய்க்கு அப்படியே இருக்கும்.இந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ரத்த இழப்பு இருக்காது. வலியோ மிக மிகக் குறைவு. ஒரு நாள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும். உடனடியாக பழைய நிலைக்கு திரும்பிவிடலாம்.

தொகுப்பு: வயிறு, இரைப்பை மற்றும் குடல் நோய் நிபுணர் ஆர்.கண்ணன்

Tags : Dr. ,R. ,eye ,
× RELATED முழு உடல் வலி நோய் !