போபால் : மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்வா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழிப் பாலம் அருகே இறந்து கிடந்த கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளின்போது சில கிளிகள் உயிருடன் இருந்தன. ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா தெரிவித்தார். பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக வனத்துறை அதிகாரிகள் ஜபல்பூருக்கு அனுப்பி வைத்தனர்.
கிளிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் டாக்டர் மனிஷா சவுகான், கிளிகளில் உணவில் விஷத்தின் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், பறவைக் காய்ச்சலுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் தெரிவித்தார். கால்நடை விரிவாக்க அதிகாரி டாக்டர் சுரேஷ் பாகேல் கூறுகையில், “இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கூழாங்கற்கள் காணப்பட்டது. இறப்புகள் முறையற்ற உணவினால் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில் உணவளிப்பது மற்றும் நர்மதா நதியிலிருந்து வரும் நீர் ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம்,” என்று கூறினார்.
