சென்னை: லாரி மீது பேருந்து மோதியபோது பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலியான தனியார் நிறுவன ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.32 லட்சம் இழப்பீடு வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் கொளஞ்சிமணி (32). காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 2017 ஜூன் 16ம் தேதி மயிலாடுதுறையில் இருந்து, சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தில் பயணித்தார். மாமண்டூர் அருகே வந்தபோது, அந்த வழியே சென்ற லாரியின் பின்பக்கத்தில் பேருந்து மோதியது. இதில் பஸ்சில் இருந்த கொளஞ்சிமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, தன் கணவரின் இறப்புக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி கொளஞ்சிமணியின் மனைவி அபி, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.ஜோதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பேருந்துக்கு முன்னால் சென்ற லாரி ஓட்டுநர், திடீரென எவ்வித சிக்னலும் கொடுக்காமல் வலதுபுறமாக உள்ள சாலைக்கு திரும்பி உள்ளார். திரும்பும் முன் பின்னால் வாகனங்கள் வருகிறதா என்று பார்க்காமல் லாரியை திருப்பியதே, விபத்துக்கு காரணம்.
லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதை, கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளது. எனவே, மனுதாரருக்கு லாரி காப்பீடு செய்யப்பட்டுள்ள நேஷனல் காப்பீடு நிறுவனம் இழப்பீடாக 32 லட்சத்து 14,000 ரூபாயை, 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
