சென்னை: பயணிகளின் வசதிக்கு ஏற்ப மல்டி மற்றும் சிங்கிள் ஆக்சில் கொண்ட 130 சொகுசு பேருந்துகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அண்மையில் மல்டி ஆக்சில் கொண்ட 20 வால்வோ பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த புதிய பேருந்துகள், மாநிலத்திற்குள்ளும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு இணையாக, தரமான பயண அனுபவத்தை குறைந்த கட்டணத்தில் இச்சேவையானது வழங்கப்படுகின்றன. சென்னை – மதுரை ரூ.790, சென்னை – நெல்லை ரூ.1080, சென்னை – திருச்செந்தூர் ரூ.1115, சென்னை – திருப்பூர் ரூ.800, சென்னை – பெங்களூரு ரூ.735, கோவை – சென்னை ரூ.880, கோவை – பெங்களூரு ரூ.770, நாகர்கோவில் – சென்னை ரூ.1,215, மற்றும் திருச்சி – சென்னை ரூ.565 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சுமார் ரூ.35 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 20 மல்டி-ஆக்சில் வால்வோ பேருந்துகள் மட்டுமின்றி 110 சிங்கிள்-ஆக்சில் பேருந்துகளும் தற்போது தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வால்வோ பேருந்துகள், ‘மோனோகாக் சேசிஸ்’ எனப்படும் ஒரு சிறப்பு அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்திலும் 51 கேப்டன் வகை இருக்கைகள் உள்ளன.
இந்த இருக்கைகளில் கால் வைப்பதற்கான சப்போர்ட் வசதியும் உண்டு. இதனால் நீண்ட தூர பயணத்தின் போது கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். மேலும், பெரிய கண்ணாடிகள் இருப்பதால், வெளியே உள்ள காட்சிகளை தெளிவாக ரசிக்கலாம். மேலே உள்ள லக்கேஜ் கம்பார்ட்மென்ட்கள் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மல்டி-ஆக்சில் பேருந்துகளில் ‘ஏர்-ஸ்பிரிங் சஸ்பென்ஷன்’ மற்றும் மேம்பட்ட ஷாக் அப்சார்பர் சிஸ்டம்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பேருந்தின் மேற்கூரையில் அவசர காலங்களில் வெளியேறுவதற்கான ‘ரூஃப் எஸ்கேப் ஹேட்ச்’ மற்றும் தீ விபத்துகளை தடுக்கும் ‘ஃபயர் ப்ரொடெக்ஷன் சிஸ்டம்’ ஆகியவையும் பயணிகள் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டுள்ளன. பேருந்தில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால், அதை உடனடியாக கண்டறிய உதவும் ‘எலக்ட்ரானிக் டயக்னாஸ்டிக் கண்ட்ரோல்ஸ்’ வசதியும் இதில் உள்ளது.
தற்போது இந்த 20 மல்டி-ஆக்சில் வால்வோ பேருந்துகளை, மாநிலத்திற்குள்ளும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்குகிறது. திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், கோவை, நாகர்கோவில், திருச்சி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த அதிநவீன பேருந்துகளை இயக்குவதற்காக, 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த 65 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் ‘ஐராவத்’ என்ற பெயரில் மல்டி-ஆக்சில் வால்வோ பேருந்துகளை இயக்கி வந்தது. தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது வால்வோ 9600 மாடல் பேருந்துகள் மூலம், பயணிகளுக்கு அதேபோன்ற மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்க இலக்கு வைத்துள்ளது. இதன் மூலம், தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு ஒரு வலுவான போட்டியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் உருவெடுத்துள்ளது. இந்த புதிய பேருந்துகளின் அறிமுகம், தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
