×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘‘தவெகவிற்கு அரோகரா’’என பிரசாரம்: இன்ஸ்டாவில் பதிவிட்டவர் மீது புகார்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில், ‘’தமிழக வெற்றி கழகத்திற்கு அரோகரா’’ என்ற கோஷம் எழுப்பி பரப்புரை செய்து அவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதற்கும் வீடியோ, புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் முருகன் கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் புகைப்படத்தை காண்பித்தும் ‘‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா’’ என்ற கோஷத்துடனும் வரிசையில் காத்திருந்த சில பக்தர்களிடம் நீங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு செலுத்த வேண்டும் எனவும் 2026ல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத்துறையை நாம கையில் எடுக்கிறோம்.

கோயிலில் இந்த மாதிரி வரிசை எல்லாம் இருக்காது அனைவருக்கும் பாஸ்தான் என பரப்புரை செய்து வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தநிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக், காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில், நேற்று நான் பணியில் இருந்தபோது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஒரு நபர் பதிவிட்டுள்ள காணொலியில் ஒரு அரசியல் கட்சியை வெளிப்படையாக பிரசாரம் செய்யும் வகையிலும் அரசியல் கோஷங்களை உரக்க முழங்கியும் பதிவிட்டுள்ளார்.

இந்த செயல் சென்னை உயர்நீதிமன்றத்தால் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என வழங்கப்பட்டுள்ள தெளிவான உத்தரவுகளை அறிந்தும் திட்டமிட்டு மீறிய குற்றமாகும். இதுகோயில் போன்ற புனிதத் தலத்தின் ஆன்மீக சூழல், வழிபாட்டு ஒழுங்கு மற்றும் பொது அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயல் ஆகும். இச்செயல் பொதுமக்களிடையே குழப்பம், பதற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்பட செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக தெளிவாக தெரிய வருகிறது. இச்செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ல் (ஐடி ஆக்ட்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே காணொலியை பதிவிட்ட நபர் மீது உடனடியாக வழக்குப் பதிந்து காணொலியை சமூக வலைதளத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு எதிர்காலத்தில் இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறாத வகையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Tiruchendur Murugan Temple ,Tavega ,Tiruchendur ,Tamil Victory Party ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு