ஸ்ரீபெரும்புதூர், ஜன.1: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் நடக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், நேற்று கோட்டூர் கிராமத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை சென்றுள்ளார்.
அப்போது, அங்கு கூடிய 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள், தங்களின் பகுதியில் சாலை வசதி, குடிநீர், கால்வாய், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து தரவில்லை எனக்கூறி, எம்எல்ஏ செல்வபெருந்துகையை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ ஆதரவாளர்கள், மக்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
நிலைமை மோசமாவதை அறிந்த எம்எல்ஏ, வேகமாக காரில் ஏறி, அங்கிருந்து செல்ல முற்பட்டார். அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் காரை முற்றுகையிட்டு, நான்கரை ஆண்டுகளாக எங்களை நீங்கள் சந்திக்க வரவில்லை, எங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே, அங்கு இருந்த ஒரு சிலர் மக்களை விலகச் செய்து எம்எல்ஏ காரை அனுப்பி வைத்தனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
