×

2026ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் 3ம் தேதி நடக்கிறது: தமிழக அரசு அனுமதி

சென்னை: 2026ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் வரும் 3ம் தேதி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித விண்ணேற்பு அன்னை தேவாலயத்தின் அருகில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவிற்கு விழா குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் வருகிற 3ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்து இருந்தனர். இதனை முன்னிட்டு வாடிவாசல் அருகே முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றதுடன், முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 3ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என்று மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் இருந்தாலும், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள தச்சங்குறிச்சியில் இருந்துதான் தொடங்குகிறது. இதேபோல் தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jallikattu ,Thachankurichi ,Tamil Nadu government ,Chennai ,Christmas ,New Year ,God ,Kandarvakottai ,Pudukkottai district ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து