டாக்கா: ராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்து, பல ஆண்டாக தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், முஸ்லிம் நாடுகளில் பெனாசிர் பூட்டோவுக்கு பிறகு 2வது பெண் பிரதமருமான வங்கதேசம் தேசியவாதக் கட்சியின் தலைவர் பேகம் கலிதா ஜியா வயது முதிர்வால் கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டுவலி என பல்வேறு உடல் நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த நவம்பர் 23ம் தேதி டாக்காவின் எவர்கேர் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மார்பு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற போதிலும், அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் கலிதா ஜியா மருத்துவமனையில் காலமானார்.
இத்தகவலை அவரது மகனும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் உறுதிபடுத்தினார். கலிதா ஜியா 3 முறை வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்துள்ளார். சுமார் 40 ஆண்டுகள் வங்கதேச அரசியலில் முக்கிய தலைவராக இருந்தள்ளார். அவரது மறைவைத் தொடர்ந்து 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிஎன்பி கட்சி அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் தற்போது இடைக்கால ஆட்சி நடந்து வரும் நிலையில், வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், பிஎன்பி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் போட்டியிட கலிதா ஜியா போகுரா-7, தினாஜ்பூர்-3 ஆகிய 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
தற்போது கலிதா மறைவைத் தொடர்ந்து அவரது மகன் தாரிக் ரஹ்மான் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். கடந்த 2018ல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கலிதா ஜியா, கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதே போல, பல்வேறு வழக்குகளில் சிக்கியதால் லண்டனில் தஞ்சமடைந்த கலிதாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 5 நாட்களுக்கு முன்பாக வங்கதேசம் திரும்பினார்.
இந்த சூழலில் கலிதாவின் மரணம் அவரது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கலிதாவின் இறுதிச்சடங்கு பிரார்த்தனை இன்று நடக்க உள்ளதாக பிஎன்பி கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள டாக்கா மாணிக் மியா அவென்யூவில் தனது கணவரும், மறைந்த முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் முழு அரசு மரியாதையுடன் கலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இறுதி அஞ்சலியில் இ்ந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அைமச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். கடந்த நவம்பர் 21ம் தேதி டாக்கா கண்டோன்மென்ட்டில் நடைபெற்ற ஆயுதப்படை தின வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் கலிதா ஜியா கடைசியாகப் பொதுவெளியில் தோன்றினார். கலிதா ஜியாவின் மறைவுக்கு அவரது அரசியல் போட்டியாளராக இருந்த வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* இந்தியாவின் எதிரி
கலிதா ஜியா ஆகஸ்ட் 15, 1946 அன்று, பிரிக்கப்படாத இந்தியாவின் தினாஜ்பூர் மாவட்டத்தில் தையபா மற்றும் இஸ்கந்தர் மஜும்தார் தம்பதியருக்குப் பிறந்தார். அவரது தந்தை, குடும்பத்தினர் தேயிலை வியாபாரம் செய்து வந்த ஜல்பைகுடியிலிருந்து, பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதிக்குக் குடிபெயர்ந்தார். 1960ல் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்து கொண்டார்.
பிரிவினைக்குப் பிறகு, 1977ல் வங்கதேச அதிபராக பதவியேற்ற ஜியாவுர் ரஹ்மான் 1978ல் பிஎன்பி கட்சியை நிறுவினார். 1981ல் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் 35 வயதில் விதவையான கலிதா ஜியா கணவரை கொன்றவர்களை பழிவாங்க அரசியலில் நுழைந்தார். அதுவரையிலும் குடும்ப பொறுப்பை மட்டுமே கவனித்த கலிதா ஜியா அரசியலில் மிக விரைவில் சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்தார்.
1991ல் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்று சாதனை படைத்தார். 1996 தேர்தலுக்கு பிறகு 12 நாட்கள் மட்டுமே கலிதா ஆட்சி நீடித்த நிலையில் அடுத்து நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர் மீண்டும் 2001 முதல் 2006 வரை பிரதமராக பொறுப்பேற்றார். இவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. அடிப்படைவாதிகளை கலிதா பெரிதும் ஆதரித்தார். 2018ல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் ஷேக் ஹசீனா அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்.
* பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல்
கலிதா ஜியாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், ‘‘வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்கதேசத்தின் வளர்ச்சி மற்றும் இந்தியா-வங்கதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது முக்கியமான பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். கலிதா ஜியாவை கடந்த 2015ம் ஆண்டு டாக்காவில் சந்தித்தேன்.
அவருடைய பார்வையும் பாரம்பரியமும் இருநாட்டு உறவுகளை வழிநடத்துவதில் தொடரும் என நம்புவோம்’’ என்றார். ‘‘பாகிஸ்தானின் நல்ல நண்பர் பேகம் ஜியா’’ என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சீனாவும் கலிதா ஜியா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
