×

காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியில் கடும் எச்சரிக்கை; ஆயுதத்தை ஹமாஸ் கீழே போடாவிட்டால் அழிவு நிச்சயம்: இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பில் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பு உடனடியாக ஆயுதங்களைக் கைவிடாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். காசா பகுதியில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் போக்கு தொடர்பான விவாதங்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-ஏ-லாகோ விடுதியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நேற்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது காசா அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் குறைப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்குக் கடுமையான கெடு விதித்தார். ‘ஹமாஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டனர். அதன்படி அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்’ என எச்சரித்தார். மேலும், ‘அவர்கள் இதற்கு இணங்காவிட்டால், அவர்களை அடியோடு அழிக்கப் பல நாடுகள் தயாராக உள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் அமைதித் திட்டத்தை 100 சதவீதம் பின்பற்றுவதாகப் பாராட்டிய டிரம்ப், ஈரான் தனது அணுசக்தி மையங்களை மீண்டும் கட்டமைக்க முயன்றால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே அமைதி முயற்சிகளில் ஈடுபட்டதற்காக டிரம்பிற்கு இஸ்ரேலின் மிக உயரிய விருதான ‘இஸ்ரேல் பரிசு’ வழங்கப்படும் என நெதன்யாகு அறிவித்தார். இஸ்ரேலியர் அல்லாத ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Tags : Gaza ,Hamas ,Trump ,Israel ,Washington ,US ,President Donald Trump ,Gaza region ,
× RELATED வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்.