×

பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் சேவை ரத்து உற்சவ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் கும்பாபிஷேக திருப்பணியால் 3வது ஆண்டாக

பள்ளிகொண்டா, டிச.31: வைணவ தலங்களில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது பள்ளிகொண்டா அரங்கநாயகி உடனுறை  அரங்கநாதர் திருக்கோயில். ஆண்டுதோறும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவு தசமி விரதமிருந்து கண் விழித்து அடுத்த நாள் காலை சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் எம்பெருமானை தரிசிப்பதால் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் யாவும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு ராஜகோபுரம் உட்பட திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் தொடர்ந்து 3வது ஆண்டாக சொர்க்கவாசல் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனால், கோயில் உற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாடவீதிகளில் சுவாமி திருவீதி உலா வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான கோபுரங்களுக்கும் பாலாலயம் செய்யப்பட்டு மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில், யாகசாலை மண்டபத்தில் தேவி, பூதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ரங்கநாதப்பெருமாளை அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் மனமுருக வேண்டி வழிபட்டனர். அதனை தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு சாவடி பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வரை பல்வேறு அறக்கட்டளைகள் சார்பிலும், கோயில் நிர்வாகத்தின் மூலமும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. வெளி மாவட்டம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கநாதப்பெருமாளை தரிசித்தனர். இந்த விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏறபாடுகளை இந்து சமய அறநிலையதுறை இணை ஆணையர் விஜயா, துணை ஆணையர் கருணாநிதி, தக்கர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் அசோகன், ஆய்வாளர் செண்பகம், செயல் அலுவலர் நடராஜன், கணக்காளர் பாபு, மணியம் ஹரிஹரன், திருக்கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Pallikonda ,Ranganatha Temple ,Kumbabhishekam ceremony ,Pallikonda Aranganayagi Udanurai ,Aranganatahar ,Temple ,Vaikunta Ekadashi ,Margazhi ,
× RELATED பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு...