×

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் காட்டுயானை முகாம்

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுமாடுகள் அவ்வப்போது நகருக்குள் உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இதேபோல, கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

இந்நிலையில், கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்கலம்கொம்பு, கே.சி.பட்டி, பள்ளத்துக் கால்வாய், உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காட்டுயானைகள் முகாமிட்டு வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள பீன்ஸ், வாழை, மிளகுக் கொடிகளை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று மாலை கீழ்மலை கிராமமான கே.சி.பட்டி அருகே, பள்ளத்துக்கால்வாய் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் காட்டுயானை ஒன்று முகாமிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal ,Dindigul district ,
× RELATED மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என...