சென்னை: காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனத்தில் எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் 2016ம் ஆண்டில் ரூ.1 கோடி கடன் பெற்றார். கடனுக்கு ரூ.50 லட்சம் கொண்ட இரண்டு காசோலைகளை சதன் திருமலைக்குமார் வழங்கி உள்ளார். கடன் தொகைக்கு அளித்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியதால் நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.
பின்னர் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் ரூ.1 கோடியை இரண்டு மாதங்களுக்குள் வழங்கவில்லை எனில் மேலும் 3 மாதங்கள் சிறை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
