×

அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்பாடு தவிர்க்க வேண்டும்

*குன்னூர் கிளை மேலாளர் அறிவுரை

குன்னூர் : விபத்துக்களை தடுக்க செல்போன் பயன்பாடு தவிர்க்க வேண்டும் என குன்னூரில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு கிளை மேலாளர் அறிவுறுத்தினார்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதற்கு மோசமான சாலை, வாகன பழுது போன்றவற்றுடன் குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, வேக வரம்பை மீறி அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசியபடியே வாகனங்களை இயக்குவது என வாகன ஓட்டிகளால் மீறப்படும் விதிமீறல்கள் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றன.

பொதுமக்கள் தான் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார்கள் என்றால், அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கூட சில சமயங்களில் இதுபோல் செயல்பட்டு வருவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளர் ராஜ்குமார் தலைமையில் அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் கிளை மேலாளர், ஓட்டுநர்களிடம் கூறுகையில், ‘‘எக்காரணத்தை கொண்டும் பேருந்து ஓட்டும்போது, ஓட்டுநர்கள் செல்போன் பேசக்கூடாது. ஓட்டுநர் செல்போனில் பேசிக்கொண்டு பேருந்து ஓட்டியது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். குன்னூரை பொருத்தவரை இதுவரை இதுபோன்ற புகார்கள் எழுந்தது இல்லை’’ என்றார்.

அதனை தொடர்ந்து அனைத்து ஓட்டுநர்களும் இனிவரும் காலங்களில் விழிப்புடன் செயல்படுவோம், பேருந்து இயக்கும்போது செல்போன் பயன்பாட்டை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதுபோல், கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு கிளை மேலாளர் தங்கராஜ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : Coonoor ,Tamil Nadu ,
× RELATED காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ....