×

நெற் பயிர்களில் புகையான் நோய் தாக்குதல் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

அந்தியூர் : ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தோனிமடுவு சுற்று வட்டாரப்பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அலுவலர்கள் முறையான களப்பணியில் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதிகளான மைக்கேல்பாளையம், புதுப்பாளையம், சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், வட்டக்காடு, தோணிமடுவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

புரட்டாசி மாதம், அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் பரவலாக நடவு செய்யப்பட்ட பி.பி.டி கனிஷ்கா, அம்மன் போன்ற நெல் ரகங்களை, தை மாதத்தில் விவசாயிகள் அறுவடை செய்வர்.
இந்நிலையில் அந்தியூர் அருகேயுள்ள சங்கராப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தோணிமடுவு, வட்டக்காடு ஆகிய பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் அதிகரித்துள்ளது.

நெற்பயிரின் அடிப்பகுதியில் உள்ள தண்டின் சாற்றை புகையான் பூச்சிகள் உறிஞ்சி பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. குறிப்பாக, ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களில் 20 முதல் 30 சதவீதம் வரையிலான பயிர்கள், புகையான் பூச்சிகளால் உறிஞ்சப்பட்டு தீய்ந்துள்ளது. அந்தியூர் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் புகையான் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தோணிமடுவு பகுதியை சேர்ந்த விவசாயி அர்ஜுனன் கூறும்போது, ‘‘இரண்டு ஏக்கரில் பி.பி.டி ரக நெல் பயிர் சாகுபடி செய்துள்ளேன். கடந்த 10 நாட்களுக்கு முன், நெற்பயிர்களின் அடிப்பகுதி பழுப்பு நிறமாகி, காய்ந்து போனது.

தனியார் வேளாண் பிரதிநிதி நேரில் வந்து பார்த்து, நெற் பயிரில் புகையான் தாக்குதல் உள்ளது என கூறினார். மேலும், பூச்சிகளை கட்டுப்படுத்த பயிர்களுக்கு தெளிக்க வேண்டிய மருந்துகள் பற்றியும் அறிவுறுத்தி சென்றார்.

இப்பகுதியில் அதிகளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். வாரத்துக்கு ஒரு முறையாவது, அந்தியூர் வேளாண்துறை அலுவலர்கள் நேரில் களப்பணி செய்து ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வுக்குப்பின், அரசு அலுவலர்களின் அறிவுறுத்தல்படி நெற்பயிர்களில் புகையான் போன்ற தாக்குதல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் தெளிவு பெறுவோம். அந்தியூர் வேளாண்துறை அலுவலர்கள் முறையாக களப்பணிக்கு வராததால், தனியார் பிரதிநிதிகளை அழைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Anthiyur ,Thonimaduvu ,Erode district ,
× RELATED பேருந்துகளை ஆய்வு செய்ய ஆணையம் கோரி வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்