- காங்கிரஸ்
- பாஜக
- பிரியங்கா
- ராகுல்
- புது தில்லி
- காங்கிரஸ் கட்சி
- ராகுல் காந்தி
- திருவனந்தபுரம்
- சஷி தரூர்
- மோடி
- காங்கிரஸ்…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி பிரியங்கா அணி மற்றும் அவரது சகோதரர் ராகுல் காந்தி அணி என இரண்டாகப் பிளவுபட்டுள்ளது என்று பாஜ விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் திடீரென பிரதமர் மோடியை ஆதரித்து பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி தலைவர்களை அழைக்காமல், அவரை மட்டும் அழைக்கும் ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் சசிதரூர் பங்கேற்று வருகிறார். தற்போது மோடி, ஆர்எஸ்எஸ் தலைமையை பாராட்டி மூத்த தலைவர் திக்விஜய்சிங் டிவிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது. அது ஒரு நாள் நடக்கும் என்று பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ராவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று பா.ஜ குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறியதாவது: ராகுல்காந்தி மீது அவரது கட்சி சகாக்களும், குடும்ப உறுப்பினர்களும் கூட நம்பிக்கையின்மையை காட்டுவதால், அவர் நிலை குலைந்து போய், இந்தியாவுக்கு எதிராகப் பேசி வருகிறார். வெளிநாடுகளில் நாட்டைக் களங்கப்படுத்தி வருகிறார். தற்போது காங்கிரஸ் கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. முன்னதாக, இதை கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் பார்த்தோம். ஆனால் இப்போது, தேசிய அளவிலேயே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. இது இப்போது ராகுலின் காங்கிரஸ் மற்றும் பிரியங்காவின் காங்கிரஸ் என்று ஆகிவிட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்சை பாராட்டிய பிறகு, காங்கிரசில் ஏற்பட்ட பிளவு வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
முன்பு உபி காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், ராபர்ட் வத்ரா போன்ற பிரியங்கா காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியைத் தாக்கினர். ராகுல் மீது நேரடித் தாக்குதலாக அமைந்த திக்விஜய் சிங்கின் அறிக்கைக்குப் பிறகு, காங்கிரஸ் இப்போது மேலும் துண்டு துண்டாகப் பிளவுபட்டுள்ளது. ராகுல் காந்தி அணியில் உள்ள மாணிக்கம் தாகூர் மற்றும் ரேவந்த் ரெட்டி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங்கைத் தாக்குகிறார்கள். அவர்கள் ஆர்எஸ்எஸ்ைசயும் தாக்கி, அவதூறாகப் பேசுகிறார்கள். அவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைப் புகழ்கிறார்கள்.
மறுபுறம், மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், ‘திக்விஜய் சிங் சொல்வது நூறு சதவீதம் சரிதான்’ என்று கூறி, அவருக்கு ஆதரவாக வந்துள்ளார். எனவே, காங்கிரஸில் எந்த நோக்கமும் தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பது பகல் வெளிச்சம் போல் தெளிவாகத் தெரிகிறது. கட்சியில் குழப்பமும் பிளவும் மட்டுமே உள்ளது. ரேவந்த் ரெட்டி மற்றும் பிறர் ராகுல் அணியிலும், திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித் மற்றும் பிறர் பிரியங்கா அணியிலும் உள்ளனர். ராகுல் காந்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஒரு பெரும் லாபி காங்கிரஸ் கட்சிக்குள் உள்ளது. அவர்கள் ‘ராகுலை அகற்றுங்கள், பிரியங்காவைக் கொண்டு வாருங்கள்; யாரையாவது கொண்டு வந்து காங்கிரஸைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுகிறார்கள். அவர்களின் அந்த இயக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
