நன்றி குங்குமம் தோழி
* சின்ன வெங்காயத்தை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து, மறுநாள் எடுத்து உரித்தால் சுலபமாக உரிக்க முடியும்.
* கொத்தமல்லி, கறிவேப்பிலையை வாங்கியதும் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
* கேக் கலவையில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுச் சாறு சேர்த்தால் கேக் மிருதுவாக இருக்கும்.
– இந்திராணி தங்கவேல், சென்னை.
*தேங்காய் சாதத்தில் சுவையை கூட்ட குக்கரில் அரிசி வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், ஒரு சிட்டிைக உப்பும் சேர்த்தால் போதும்.
*இஞ்சி, பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் இவற்றை மிக்சியில் அரைத்து ரவா தோசை மாவில் கலந்துவிட்டு, கடுகு, உளுந்து தாளித்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
*ஒரு மூடி தேங்காய் துருவலையும், ஏழு பச்சை மிளகாயையும் அரைத்து தோசை மாவில் கலந்து தோசை வார்த்து விட்டால் தோசை சுவையோ சுவை.
– கே.சுபாக்கனி, கன்னியாகுமரி.
*அப்பளத்தைச் சுட்டு அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுத்து, தேவையான அளவு உப்புடன் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிடலாம்.
*ரவையை உப்பு போட்டு பிசிறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் சூப்பராக இருக்கும்.
*வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் கலந்தால் சுவையுடன் இருக்கும்.
*மைக்ரோ ஓவனில் மறு சூடு செய்யும் போது சாதம், பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்து, பின்னர் சூடு செய்தால், அவை வறண்டு போகாமல் இருக்கும்.
– கே.காசி, திருவண்ணாமலை.
*அடை கரகரப்புடன் ருசியாக இருக்க பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும்.
*குருமாவில் காரம் அதிகமாகி விட்டால், ஒரு கப் தயிர் சேர்த்து லேசாக கொதிக்க விட்டால், காரம் சரியாகி விடும்.
*குலோப் ஜாமூன் பாகு மீதமாகி விட்டால் அதில் மைதா மாவை சேர்த்து, சப்பாத்தி போல தட்டி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் பொரித்தால், சுவையான பிஸ்கெட் ரெடி.
– விஜயலட்சுமி, வேலூர்.
* ஈரமான காபி ஃபில்டரில் காபிப் பொடியை போட்டால் அடைத்துக் கொள்ளும். ஃபில்டரை அடுப்பில் வைத்து சூடு காட்டிய பின் பொடியை போட்டு வைத்தால் டிக்காஷன் நன்றாக இறங்கும்.
* ஜாம் கெட்டியாகிவிட்டால் பாத்திரத்தில் சுடுநீரை வைத்து அதில் ஜாம் பாட்டிலை வைத்தால் இளகிவிடும்.
– வெ.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.
* இட்லி மாவை அரைத்து, கல் உப்பைப் போட்டு ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அப்படியே வைத்து மூடுங்கள். மறுநாள் காலை ஆப்ப சோடாவுடன் கரைத்து இட்லி வார்த்தால் மாவு நீர்த்துப் போகாது. மிதமான புளிப்புடன் பூப்போன்ற இட்லி தயார்.*முருங்கைக் கீரை, அகத்திக் கீரையை நீர் ஊற்றாமல் உப்பு தண்ணீர் தெளித்து பாத்திரத்தை மூடாமல் வேகவைக்க வேண்டும்.
*ஜாடியில் தாளித்த ஊறுகாயை வைப்பதற்கு முன் சிறிது கல் உப்பு போட வேண்டும். பின் ஊறுகாயை கொட்டி வறுத்துப் பொடித்த கடுகுத்தூள், ஊறுகாயின் மேலே காய்ச்சாத நல்லெண்ணெய் ஊற்றினால் வாசமுடன் இருக்கும். சீக்கிரம் கெட்டும் போகாது.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
