மணப்பாறை: திருச்சி அருகே வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் பயன்படுத்திய வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலையில் உள்ள காப்பு காடு துப்பாக்கி சுடும் பயிற்சி தளமாகும். இங்கு இந்திய ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப், என்எஸ்ஜி போன்ற பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு போலீசார் அடிக்கடி துப்பாக்கி சுடும் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் ஏவும் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில் இங்குள்ள நாகனூர் காப்பு காடு பகுதியில் வன காவலர் பாலமுருகன், வனவர் ஜோன் பார்க் ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மரம் ஒன்றியின் அடிப்பகுதியில் பாதி புதைந்த நிலையில் 81 எம்எம் மாடல் ரக ராக்கெட் லாஞ்சர் ஒன்று கிடந்ததை பார்த்தனர். அதேபோல் இந்த லாஞ்சர் கிடந்த இடத்தில் இருந்து ஒன்றரை கிமீ தொலைவில் அதே ரக மற்றொரு ராக்கெட் லாஞ்சர் கிடந்ததையும் கண்டுபிடித்தனர். இந்த 2 லாஞ்சர்களும் தலா 3 கிலோ எடை இருந்தன. இவை பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்டு வெடிக்காத லாஞ்சர்களாகும்.
இதுகுறித்து வனத்துறையினர் வையம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் இரவோடு இரவாக சென்று ராக்கெட் லாஞ்சர்களை பார்வையிட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினர், வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களை கைப்பற்றி அதே வனப்பகுதியில் ஜேசிபி மூலம் குழி தோண்டி பாதுகாப்பாக புதைத்து வைத்தனர். இந்த ராக்கெட் லாஞ்சர்கள் ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்டவை. அவை வெடிக்காமல் உள்ளது. இந்த லாஞ்சர்கள் விரைவில் செயலிழக்க செய்யப்படும் என்று போலீசார் கூறினர்.
