- சர் தியாகராயா கல்லூரி
- வைர விழா
- தண்டாயர்பேட்டை
- திருவொற்றியூர் நெடுஞ்சாலை
- வண்ணாரப்பேட்டை
- கல்லூரி அதிபர்
- சிரஞ்சீவி மச்சா
- உச்ச நீதிமன்றம்
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவுற்றதை தொடர்ந்து, வைரவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி தாளாரும், செயலாளருமான சிரஞ்சீவி மச்சா தலைமை வகித்தார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவருமான ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவசுப்ரமணியம், கல்லூரி முதல்வர் தியாகராஜன் உள்பட கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
வைர விழா நினைவு தூண்கள் மற்றும் கல்லூரி வரலாற்றை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை முன்னாள் நீதிபதிகள் திறந்து வைத்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் புகைப்படம் மற்றும் ஆவணக் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் முக்கிய அம்சமாக, இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வராத அரிய புகைப்படங்கள், வரலாற்று ஆவணங்கள், கல்லூரி செய்தித்தாள்கள், இதழ்கள், நிர்வாகப் பதிவுகள் மற்றும் நினைவு பதிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜமன்னார், கல்லூரி கட்டிட நிதிக்காக நடைபெற்ற நாடக விழாவை தொடங்கி வைத்த நிகழ்வு உள்ளிட்ட பல புகழ்பெற்ற நீதிபதிகள், நிர்வாகிகள், அறிஞர்கள் மற்றும் பொது தலைவர்கள் கல்லூரியைச் சந்தித்த வரலாற்றுப் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
கலை, திரைப்படம் மற்றும் பொது வாழ்வு துறைகளில் சிறப்பிடம் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஏ.வி.எம்.மெயப்ப செட்டியார், ராஜாஜி, காமராஜர் மற்றும் சி.என்.அண்ணாதுரை ஆகியோரின் வருகைகளை பதிவு செய்த புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. இதனை மாணவர்களும் பேராசிரியர்களும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
