×

கூட்டணி இன்னும் அமையாததால் விரக்தி எடப்பாடி மீண்டும் பிரசாரம் தொடக்கம்: பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா 9ம் தேதி வருகை

சென்னை: அதிமுக கூட்டணியில் சிறு கட்சிகள் கூட சேர முன் வராத நிலையில், விரக்தியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று முதல் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். அதேநேரத்தில் கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா வருகிற 9ம் தேதி சென்னை வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்டணியை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக உள்ளன. திமுகவைப் பொறுத்தவரை கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. அக்கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, மமக, கொமதேக, தமிழர் விடுதலைக்களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜ கடந்த மக்களவை தேர்தலில் தனி அணி அமைத்துப் போட்டியிட்டன.

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆனால் அதிமுக, பாஜ கூட்டணியில் இருந்த பாமக தற்போது இரண்டாக உடைந்துள்ளது. இதனால் எந்த அணி எந்த பக்கம் போகும் என்று தெரியாத நிலை உள்ளது. தேமுதிகவும், ராஜ்யசபா சீட் கொடுக்காத விரக்தியில் ஜனவரியில்தான் கூட்டணியை அறிவிப்போம் என்று கூறிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி முடியாது என்று தெரிவித்து விட்டார்.

இதனால் விரக்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம், திமுக அல்லது தவெக கூட்டணிக்கு செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதேபோல டிடிவி.தினகரனும் என்ன செய்வது என்று தெரியாதநிலையில், எடப்பாடியை முதல்வர் வேட்பாளரில் இருந்து மாற்றினால் அதிமுக கூட்டணிக்கு வருவேன் என்று கூறி வருகிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோரை சரிக்கட்டி கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரும் பேசி வருகிறார்.

இந்தநிலையில், கூட்டணி குறித்து பேச ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் கடந்த வாரம் சென்னை வந்தார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது நீங்கள் அழைத்து யாரும் கூட்டணிக்கு வராததால், கூட்டணியை ஏற்படுத்தும் பொறுப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு சென்று விட்டார். இதனால் கூட்டணி உருவாக்க முடியாமல் பாஜவும் திணறி வருகிறது. கூட்டணியை இறுதி செய்வதற்காக வருகிற 9ம் தேதி அமித்ஷா சென்னை வருகிறார்.

அதற்குள் அனைத்து சிறிய கட்சிகளிடமும் வழக்குகள், பணம் ஆகியவற்றை காட்டி வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று பாஜ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணி உருவாகும் என்று காத்திருந்த எடப்பாடி பழனிசாமியும் கடும் அதிருப்தி அடைந்தார். கட்சிகள் வரும் பேசலாம் என்று இருந்தவர் எந்தக் கட்சியும் வராததால், இன்று முதல் அவர் தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்குகிறார்.

சோழிங்கநல்லூரில் தனது பிரசாரத்தை அவர் இன்று தொடங்குகிறார். தொடர்ந்து 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அமித்ஷா சென்னை வரும்போது அவரும் அவரை சந்தித்துப் பேசுகிறார். இதனால் அதிமுக, பாஜ கூட்டணி முடிவாகாமல் கடும் குழப்பத்தில் உள்ளதால், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இது எடப்பாடியின் பிரசாரத்திலும் எதிரொலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

* சிறிய கட்சிகளே தயக்கம் தவெக மட்டும் எப்படி வரும்?

அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் சீட்டு கிடைக்கும், ஓட்டு கிடைக்குமா என்று பல கட்சிகளும் கணக்குப் போட ஆரம்பித்து விட்டன. இதனால், அதிமுக கூட்டணியில சேர பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை. சிறிய கட்சிகளான அமமுக, தேமுதிக, 2 பாமக, புதிய தமிழகம், தமிழக முன்னேற்றக்கழகம், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் என எந்த கட்சிகளும் முன்வராமலும், கூட்டணியை உறுதி செய்யாமலும் உள்ளனர்.

ஆனால், தவெகவை கூட்டணியில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி எவ்வளவோ முயன்றார். தற்போது பாஜ அந்த திட்டத்தை கையில் எடுத்து விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் சிறிய கட்சிகளே தயக்கம் காட்டும்போது தவெக மட்டும் எப்படி கூட்டணிக்கு வரும் என்கின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.

Tags : Amitsha ,Chennai ,Eadapadi Palanisami ,Adimuka ,
× RELATED உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து...