துபாய்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12ம்தேதி முதல் பிப். 1ம்தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு நம்பர் 1 வீராங்கனையான பெரலாசின் 27 வயதான அரினா சபலென்கா தயாராகி வருகிறார். கடந்த 2023, 24ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், 2025 பைனலில் அமெரிக்காவின் மேடிசன் கீசிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆண்டு 3வது முறையாக பட்டம் வெல்லும் இலக்குடன் அவர் ஆஸி. புறப்படுகிறார். இதனிடையே அரினா சபலென்கா, துபாயில் நாளை (ஞாயிறு) நடைபெறும் காட்சி போட்டியில், ஆஸ்திரேலியா டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோசுடன் மோத உள்ளார்.
துபாயில் உள்ள கோகோ-கோலா அரீனா அரங்கில் இந்திய நேரப்படி நாளை இரவு 9.15 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த அரங்கில் 17 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை காணலாம். ஆண்-பெண் மோதும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சபலென்கா கூறுகையில், “ஆண் உயிரியல் ரீதியாக பெண்ணை விட வலிமையானவர் என்பது மிகவும் வெளிப்படையானது. ஆனால் நான் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருக்கிறேன். இந்த நிகழ்வு மகளிர் டென்னிஸை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர உதவும்’’ என்றார்.
