×

பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி; அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து: 22 ஆயிரம் விமான சேவைகள் கடும் தாமதம்

 

நியூயார்க்: கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், 26ம் தேதி ‘டெவின்’ எனப் பெயரிடப்பட்ட பனிப்புயல் அமெரிக்காவின் வடகிழக்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கியது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், பலத்த பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சுமார் 9 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவானதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக நியூயார்க், சிகாகோ, டெட்ராய்ட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,802 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 22,349 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. குறிப்பாக ஜெட் புளூ, டெல்டா மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான சேவைகளை நிறுத்தின. பாதிக்கப்பட்ட பயணிகள் வார இறுதியில் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Tags : Blizzard ,United States ,New York ,Christmas holiday ,Devin ,northeastern ,New Jersey ,
× RELATED தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான...