அட்லாண்டா: அமெரிக்காவின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடல் அழகி மிக்கி லீ, காய்ச்சல் மற்றும் மாரடைப்பால் கிறிஸ்துமஸ் தினத்தில் காலமானார். அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று 10வது இடத்தைப் பிடித்து பிரபலமான மிக்கி லீ (35) என்பவர் ஃபுளோரிடாவில் வசித்து வந்தார். தற்போது அட்லாண்டாவில் வசித்து வந்த நிலையில் கடந்த வாரம் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால் கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காய்ச்சல் காரணமாகத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று மாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மிக்கி லீ மறைவுக்குப் பிறகு பேசிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜூலி சென் மூன்வ்ஸ், ‘மிக்கி லீக்கு பிறவிலேயே இதயத்தில் ஓட்டை இருந்தது’ என்ற தகவலை வேதனையுடன் பகிர்ந்தார். இதற்கிடையே மருத்துவச் செலவிற்காக ‘கோ ஃபண்ட் மீ’ தளம் மூலம் 32,000 டாலர்கள் (சுமார் ரூ.27 லட்சம்) நிதி திரட்டப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக போட்டியாளரான ரேச்சல் ரெய்லி கூறுகையில், ‘அவர் இந்த உலகிற்கே ஒரு ஒளிவிளக்காக திகழ்ந்தார்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். சமூக வலை தளங்களில் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
