*போலீசார் கஸ்டடி எடுக்க முடிவு
பள்ளிபாளையம்: கைதியிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் வக்கீல், பைனான்சியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் கைதியை போலீசார் விசாரணைக்காக கஸ்டடி எடுக்க உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் இ.காட்டூரைச் சேர்ந்தவர் வக்கீல் பாஸ்கர்(32). இவரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும், அதை தனக்கு தெரிந்த ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெறுவதற்கு முயல்வதாகவும், பள்ளிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டிஎஸ்பி கவுதம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ ரஞ்சித்குமார், வெற்றிவேல் ஆகியோர், நேற்று அதிகாலை வக்கீல் பாஸ்கரன் வீட்டில் சோதனையிட்டனர். இதில் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.
பள்ளிபாளையம் அக்ரகாரத்தை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்யும் ராகுல்(22), இவரது நண்பர்கள் ஆனங்கூரை சேர்ந்த பைனான்ஸ் வசந்த்(27), சென்ட்ரிங் தொழிலாளி சஞ்சய்(21) ஆகியோர் நண்பர்கள். இவர்களுக்கு மோகனூர் திருட்டு வழக்கில் கைதான, நாமக்கல் சந்தைபேட்டையை சேர்ந்த குற்றவாளி மௌலீசுடன் நட்பு இருந்துள்ளது. கடந்த 10 நாட்கள் முன்பு மோகனூர் திருட்டு வழக்கில் கைதாகும் முன், இவர்கள் மூவரும் நாமக்கல் சென்று அவரை சந்தித்துள்ளனர். இதில் மௌலீஸ், தன்னிடம் இருந்த உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியை கொடுத்து, அதை விற்று பணம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு, பள்ளிபாளையம் வந்த மூவரும் வக்கீல் பாஸ்கரனிடம் கைத்துப்பாக்கியை கொடுத்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். கைத்துப்பாக்கியை பெற்றுக்கொண்டு, பணம் கொடுத்த வக்கீல் பாஸ்கர், தனக்கு தெரிந்த ஒருவரிடம் கைத்துப்பாக்கியை அடமானமாக வைத்து அதிக பணம் பெற முயன்றுள்ளார். இந்த விவகாரம் வெளியில் கசிந்ததும், போலீசார் வக்கீல் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடமிருந்த கள்ளத்துப்பாக்கியை கைப்பற்றி கைது செய்தனர்.
வக்கீல் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் பைனான்சியர்கள் ராகுல், வசந்த், சென்ட்ரிங் தொழிலாளி சஞ்சய் ஆகியோரை கைது செய்தனர். கள்ள கைத்துப்பாக்கி மௌலீஸ்க்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து போலீசார் சிறையில் உள்ள மௌலீசை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
