*மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
கோவை : கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் 103 பவுன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே. புதூர் அய்யப்பா நகரை சேர்ந்தவர் ஜெப மார்ட்டின் (45). இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் கல்லூரியிலும், மற்றொருவர் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 24ம் தேதி இரவு ஜெப மார்ட்டினுக்கு அவரது உறவினர் ஒருவர் சாத்தான்குளத்தில் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அன்று இரவு தனது மகள்களை அழைத்து கொண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு சென்றார்.
அங்கு துக்க நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்திருந்ததைக் கண்டு ஜெப மார்ட்டின் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 103 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெப மார்ட்டின் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் சிறிது தூரம் சென்று நின்றது. இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் கதவை உடைக்காமல் கள்ளச் சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த துணிகர சம்பவத்தை தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
மேலும், 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
தலையணை உறையில் நகையை எடுத்து சென்ற கொள்ளையர்
ஆசிரியை ஜெப மார்ட்டின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட கொள்ளையர்கள் அவர்களது உருவம் பதிவாகாமல் இருக்க அவரது வீட்டின் அருகில் இருந்த வீடுகளின் சிசிடிவி கேமிராக்களை அடித்து உடைத்துள்ளனர். சில வீடுகளில் சிசிடிவி கேமிராக்களின் வயர்களை அறுத்து துண்டித்துள்ளனர். இதேபோல படுக்கை அறையில் இருந்த பீரோவில் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் அதனை அங்கிருந்த தலையணை உறையில் போட்டு கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
