×

பொருநை அருங்காட்சியகத்திற்கு விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்: மாநகர காவல்துறை அறிவிப்பு

 

நெல்லை: நெல்லை- கன்னியாகுமரி தேசிய நொடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் வகையில் அருங்காட்சியகத்தில் விரைவில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை, ரெட்டியார்பட்டி இரட்டை மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த, முதல் நாளில் சுமார் 1,200 பேர் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் மக்கள் வருவை பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக நேற்று முன்தினம் 3,300 பேர் வருகை தந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,700 பேர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளனர். இந்த அபரிமிதமான மக்கள் வருகையால் அருங்காட்சியக வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அருங்காட்சியகம் அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் அந்த வழியாக அதிவேகத்தில் சென்று வருகின்றன. அதே நேரத்தில் அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் அருங்காட்சியகத்திற்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிளை சாலைக்கு திரும்புகின்றன. இதனால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரண்டு போக்குவரத்து போலீஸ் பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை முறைப்படுத்தி வருகின்றனர். மேலும், தற்போது ஒரு எஸ்ஐ தலைமையிலான போலீஸ் குழுவினர் தினசரி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாலை நேரங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அந்த பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு தேவை அதிகரித்து இருப்பதால் அருங்காட்சியகத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான தேவையும் எழுந்துள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர கிழக்கு துணை கமிஷனர் வினோத் சந்தாராம் கூறுகையில், ‘‘அருங்காட்சியகத்திற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நிரந்தரமான முறையில் அங்கு ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கத் திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அமைக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகவேகமாக வருவதைத் தவிர்க்க, அருங்காட்சியகப் பகுதியில் பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில், 100 மீட்டர் தொலைவிற்கு முன்னதாகவே ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நெல்லை மாநகர காவல்துறை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்’’ என்றார்.

Tags : Porunai Museum ,Nellai ,Nellai-Kanyakumari National Highway ,
× RELATED புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே...