மும்பை: இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான கோவிந்தா பணத்துக்காக பழகும் பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி சுனிதா அஹுஜா பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். பாலிவுட் நடிகர் கோவிந்தா மற்றும் அவரது மனைவியான சுனிதா தம்பதியினருக்கு திருமணமாகி 37 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2024ம் ஆண்டு முதலே இவர்களது திருமண வாழ்க்கையில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து பெறப்போவதாகவும் பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவி வந்தன. இந்த நிலையில், இச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வதந்திகளை மறுத்தனர்.
இருப்பினும், இந்த ஆண்டு தங்களது குடும்பத்திற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துவிட்டதாகவும், இது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுனிதா வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள சுனிதா, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் கணவர் வேறொரு பெண்ணுடன் (கள்ளத்தொடர்பு) பழகி வருகிறார். அந்த பெண் அவரை நேசிக்கவில்லை, பணத்திற்காக மட்டுமே பழகுகிறார்.
நடிகைகள் மீது எனக்கு மரியாதை உண்டு, ஆனால் தவறான எண்ணம் கொண்ட பெண்களை ஏற்க முடியாது. கோவிந்தாவின் வாழ்க்கையில் அவரது மறைந்த தாய், மனைவி மற்றும் மகள் ஆகிய மூன்று பெண்களுக்கு மட்டுமே இடமுள்ளது. நான்காவதாக ஒருவருக்கு இடமில்லை’ என்று ஆவேசமாக கூறியுள்ளார். மேலும், ‘பணத்துக்காக மட்டும் உடன் இருக்கும் ஜால்ராக்களிடம் இருந்து விலகி, குடும்பம் மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றும் கணவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 2026ம் ஆண்டிலாவது இந்த சர்ச்சைகள் அனைத்தும் ஓய்ந்து, நிம்மதி மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
