×

பாவங்கள் போக்கும் பவானி யோகினி

பவானி யோகினியின் தோற்றம்

இந்த யோகினி, சிங்கத்தின் மீது அமர்ந்து சிம்மவாகினியாகத் தோற்றம் தருகிறாள். முகத்தில் அமைதியும் ஆனந்தமும் கொப்பளிக்கிறது. அதிகச் சிரமம் இல்லாமல் வலிமை, ஆற்றல், திறமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதே இவளது தனித்தன்மை. இவள் தனது ஒரு கரத்தில் அறுத்த தலையைப் பிடித்திருக்கிறாள்.

இந்த யோகினியின் தத்துவம்

இந்த யோகினியின் கையில் இருக்கும் வெட்டப்பட்ட தலை, ஆணவத்தின் குறியீடாக இருக்கிறது. அந்த ஆணவம் என்னும் தலைகனத்தை அறுத்தால்தான் ஞானம் பிறக்கும். அந்த வகையில் அடியார்களின் ஆணவத்தை அழித்து ஆன்மிக முன்னேற்றம் தருபவள் இந்த யோகினி. தலை என்றும் உடலோடு சேர்ந்து இருப்பது. அந்த வகையில் மனிதனும் உலகாய பற்றுக்களோடுகூடி இருக்கிறான். பற்றை அறுத்த பிறகு பிறவி எனும் நோய் நீங்கி விடுகிறது. இதையே உடலில் இருந்து பிரிந்து காணப்படும் தலையானது காட்டுகிறது. பற்றற்ற தெய்வ நிலையை இந்த தேவி தருகிறாள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.

இப்படி உலகாய இன்ப துன்பங்களில் உழலும் மனம் ஒருநிலைப்பட்டு தியான நிலையில், தனக்குள்ளே இருக்கும் ஆன்ம ஸ்வரூபத்தை தேட வேண்டும் என்பதை கையில் வெட்டப்பட்ட தலையோடு சிங்க வாகனத்தில் தியானத்தில் இருக்கும் இந்த யோகினி காட்டுகிறாள். வெளியில் பிரளயமே நடந்தாலும் தியானத்தில் இறைவியோடு ஆழ்ந்திருக்கும் உன்னத நிலையை இந்த தேவி தருகிறாள்.

சிங்க வாகனமும் இந்த யோகினியும்

ஹிம்ச என்ற வார்த்தையே மருவி சிம்ஹம் என்று ஆனது, என்று சொல்லும் வழக்கமும் உண்டு. அந்த வகையில் ஹிம்சை அதாவது, பரம்பொருளின் அழித்தல் தொழிலை குறிக்கும் சிம்ம வாகனத்தில் இந்த தேவி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பரம்பொருளின் சம்ஹார சக்தியை குறிக்கும் சிம்மத்தை வாகனமாக கொண்ட யோகினி இவள் என்பதால், மனிதனின் உள்ளே இருக்கும் எதிரியான ஆணவம், கர்மம், மாயை முதலிய எதிரிகளையும், வெளியில் இருக்கும் மற்ற எதிரிகளையும் இந்த யோகினி அழிக்கிறாள் என்பதை இது காட்டுகிறது.

காட்டுக்கே அரசனாக இருந்த போதிலும், சிங்கம் இரண்டடி எடுத்து வைத்தால் தனக்கு பின்னே என்ன நடக்கிறது என்பதை திரும்பி நோக்கும். இதை அரிமாநோக்கு என்கிறோம். இதற்கு காரணம் பயமில்லை, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளும் ஒரு நோக்கம்தான் இதற்கு காரணம். அந்த வகையில் மனிதன் உலகாய வாழ்க்கையில் சுற்றித் திரிந்தாலும், நின்று நிதானமாக சில கணங்கள் தனக்குள் இருக்கும் இறைவனைத் தேட வேண்டும் என்பதை குறிக்கவே, சிங்க வாகனத்தில் தியானத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள் இந்த யோகினி.

தேவியின் வாகனமான சிம்மம், தேவி மகிஷாசுரனை வதைக்க, துர்க்கையின் வடிவில் தோன்றிய போது, இமய மலையின் அரசனான ஹிமவான் அவளுக்கு பரிசாக கொடுத்தது. தர்மத்தின் வடிவமாக கருதப்படுகிறது. தர்மத்தின் வடிவான சிங்கத்தின் மீதில் இந்த யோகினி தியானத்தில் இருப்பது, தர்மத்தை கடைபிடித்தால்தான் மேலான ஞானம் கிடைக்கும் என்பதை காட்டுகிறது.சாது மிரண்டால் காடு தாங்காது என்று சொல்வது போல், அமைதியாக தியானத்தில் இருக்கும் இந்த யோகினியின் கையில்தான் வெட்டப்பட்ட தலையும் இருக்கிறது. இது தர்மத்தை காக்க இறைவன் கொண்ட நியாயமான கோபமான தர்ம ஆவேசத்தை குறிக்கிறது. இந்த தர்ம ஆவேசம்தான் அதர்மத்தை அழிக்கிறது.

இதன் மூலமாக, பற்றுக்களை விட்டவள் என்றும், ஆணவத்தை அடியோடு வெட்டி எறிபவள் என்றும் நமக்கு அறிவிக்கிறாள். இவ்வாறாக ஆணவத்தினால் தடைகள் ஏற்படாமல் தியானத்தில் இருக்கும் இவள் மிக விரைவாக உன்னத நிலையை அடைவதோடு அதிலேயே நித்ய வாசம் செய்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் பவானி யோகினி மிக உன்னதமான தியான பலன்களை வழங்கி அருள் செய்வாள்.

இந்த யோகினி சிங்கத்தின் மீது அமர்ந்து, ஆங்காரமோ ஆணவமோ இல்லாத நிலையில் தியானத்தைத் தொடர்கிறாள். அதனால்தான் அவள் முகத்தில் அசாத்தியமான அமைதி குடிகொண்டிருக்கிறது. அதனால் அவளது வீரத்தைக் குறைத்து மதிப்பிடுவது முட்டாள்தனம். கோபம் வந்தால் பத்ரகாளியாக மாறி தலையைக் கொய்து விடுவாள் என்பதை அவள் கையில் உள்ள வெட்டப்பட்ட தலை எச்சரிக்கை செய்கிறது.

அவளது மற்றொரு கரத்தில் ரத்தம் நிரம்பிய கபாலம் காணப்படுகிறது. யோகத்திலும் தியானத்திலும் உச்சநிலை எய்திய அவளது உடலே தெய்வீகமான கொள்கலனாக மாறுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் எல்லையற்ற சக்தி அவளது
உடலில் வந்து பாய்கிறது. அதை அவள் தனது
பக்தர்களுக்கு வாரி வழங்குகிறாள்.
பவானி யோகினியின் பெயர் விளக்கம்

பவ: என்ற சொல், பரமேஸ்வரன், பிறவிக்கடல், மன்மதன் என்று மூன்று பொருளை உடையது. இந்த மூன்றையும் வாழ வைப்பவள் என்பதால், பவானி என்று அம்பிகைக்கு திருநாமம். அம்பிகையின் பக்தர்களின் ஆசையை அடக்கவும், தியானத்தில் இறைவனோடு ஒன்றுதலையும் தரும் இந்த யோகினிக்கும் இந்த நாமம் பொருந்துகிறது. பவம் என்றால், நீரை குறிக்கும். நீர் இல்லாமல் உலகம் இல்லை. நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னது போல நீரின் வடிவில் உலகை வாழ வைக்கும் இறைவனுக்கு பவன் என்று பெயர். அந்த பவன் என்ற இறைவனின் சக்தி என்பதால் அம்பிகைக்கு பவானி. இப்படி உலகையே வாழ வைக்கும் ஜீவ சக்தியான சிவத்தை தியானத்தின் மூலம் அடைய வைப்பதால் இந்த யோகினிக்கு பவானி என்று பெயர்.

பவானி தேவியும் சத்ரபதி சிவாஜி மகாராஜாவும்

துல்காப்பூரில் இருக்கும் அம்பிகையின் வடிவமான பவானி தேவியை வழிபட்டு தான் சத்ரபதி சிவாஜி மகாராஜா, முகலாயர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டும் அளவு ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் நிறுவினார். இன்றளவும், அந்த கோவிலில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்கு பவானி தேவி, பிரசாதமாக கொடுத்த இரண்டு வீர வாள் இருக்கிறது. இந்த வாளைக் கொண்டு தான் வெல்ல முடியாத பெரும் முகலாய சேனையை சத்ரபதி சிவாஜி மகாராஜா வென்றார்.

சௌந்தர்ய லஹரியில் பவானி

சௌந்தர்ய லஹரியின் 22 ஆம் ஸ்லோகம், பின்வரும் கருத்தை உடையது. அம்மா பவானி உன் தாஸனான என் மீது, கருணையான உன் பார்வையை செலுத்தக் கூடாதா என்று கேட்க நினைத்தான் பக்தன். அவன் அதை முழுதாக சொல்லி முடிக்கும் முன், அவனுக்கு அருள வேண்டும் என்ற ஆசையில், அவன் சொல்ல வந்த வார்த்தைகளை முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன்னேயே, அம்பிகை, “நீயாக நான் ஆக வேண்டும்’’ என்னும் பொருளில் அவன் சொன்ன பாதி வார்த்தையை புரிந்து கொண்டு, பரம கருணையால் தேவர்களுக்கெல்லாம் கிடைப்பதற்கரிய தன் பாதம் என்னும் பதவியைக் கொடுக்கிறாள் என்பது ஸ்லோகத்தின் அர்த்தம். அந்தவகையில் அம்பிகையின் பவானி என்ற பெயரை சொன்னாலேயே முக்தி கிடைத்துவிடும் என்பது கருத்து.

பவானி தேவியும் பவானி யோகினியும்

ஒரு தலைவனின் பெயரை, தொண்டன் வைத்துக் கொள்வதை இந்த காலத்திலும் பார்க்கலாம். அந்த வகையில், தனது தலைவியான அம்பிகையின் பெயரை இந்த யோகினியும் வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், உலகத்து மனிதர்கள் செய்யாத ஒரு செயலை அம்பிகை தனது ஒப்பற்ற கருணையின் பெயரால் செய்கிறாள். தலைவனின் பெயரைதான் தொண்டன் வைத்துக்கொள்வான். தொண்டன் பெயரை தலைவன் வைத்துக்கொள்வதில்லை.

ஆனால்,அம்பிகை ஒருபடி மேலே சென்று தனக்கு மனமார பணியாற்றும் தனது தொண்டர்களான யோகினிகளின் பெயரை தனது பெயராக தாங்குகிறாள். லலிதா சஹஸ்ர நாமத்தில் 653 ஆவது நாமாவாக, யோகினி என்ற நாமம் வருகிறது. இதை வைத்து அம்பிகையின் அளவிட முடியாத கருணையை அறிய முடிகிறது இல்லையா.அம்பிகையின் பெயரை இந்த யோகினி வைத்துக்கொண்டிருந்தாலும், அம்பிகையே ஆதி முதல் மூலமான ஆதி பராசக்தி என்பதையும் அவளுக்கு தொண்டு செய்யும்சக்தியே இந்த யோகினி என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

பவானி யோகினியை வழிபடுவதால் வரும் நன்மைகள்

பவானி யோகினி இந்த வகையில் நேர்மறையான சிந்தனையில் வடிவம் கொள்கிறாள். இவள் நல்ல செயல்களின் தலைவியாக இருந்து வலிமையான ஆற்றல் மிகுந்த தியானத்தின் வடிவமாகத் திகழ்கிறாள். தன்னை மனத்தில் இருத்தி யோகசாதனைகள் செய்யும் பக்தர்களுக்கு வெற்றியை அளிக்கிறாள். ஏன் என்றால், அவள் சிம்மவாகினி. சிங்கத்தைப் போன்ற வலிமையும், எடுத்த காரியத்தில் வெற்றியும் வேண்டுகிறவர்கள் இவளை வழிபடலாம்.

ஜி.மகேஷ்

Tags : Bhavani Yogini ,
× RELATED திருமாங்கல்ய தாரணம்