சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு தூதரகத்திற்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று இரவு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், வங்கதேச நாட்டின் தூதரத்தில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து பணியில் இருந்த போலீசார் உடனே தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டின் தூதரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எந்த வெடி குண்டும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் உதவியுடன் தேடி வருகின்றனர். சில நாட்களாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கும் சம்பவம் குறைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
