சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொண்டர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்கு பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நாம் கண்டோம். ஏசுதலையும் ஏகடியம் பேசுதலையும் புறந்தள்ளி மக்களுடன் மக்களாக இணைந்து களமாடுவதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தவெக என்றாலே தகுதி மிக்க, தரம் மிக்க, ராணுவ கட்டுப்பாடு மிக்க, கண்ணியம் மிக்க அரசியல் போர்ப் பெரும்படை என்பதை தரணிக்கு உணர்த்த வேண்டும்.
நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை எனில் அவர்களின் வாக்குரிமை உறுதியாக. நம் கழக தோழர்கள் விரைந்து உதவிட வேண்டும். புதிய வாக்காளர்களில் ஒருவர்கூட விடுபடாமல் பார்த்து பார்த்து சேர்க்க வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கிய பொக்கிஷம். செயல்மொழியே நமது அரசியலுக்கான தாய்மொழி. அதை மனத்தில் கொண்டு, தொடர்ந்து களமாடுங்கள் என கூறியுள்ளார்.
