சென்னை: தங்கம் விலை ஆண்டு இறுதியில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுன் ரூ.1,600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2,160 என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. தங்கம் விலை ஆண்டு இறுதியில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத உச்சத்தை பதிவு ெசய்தது. அதாவது அன்றைய தினம் பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120க்கு விற்பனையானது. ஒரு பவுன் ஒரு லட்சம் என்ற இமாலய உச்சத்தை எட்டி அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறுநாளும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, மறுநாளில் அதாவது, 16ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு பவுன் ரூ.98,800க்கு விற்றது.
அதன் பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக தங்கம் விலை உயர தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது காலை, மாலை என இரண்டு வேளை விலை உயர்வு என்பது இருந்தது. காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.640, மாலையில் ரூ.720 என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 560 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து நகை வாங்குவோர் விடுபடுவதற்குள் நேற்றும் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,02,160க்கும் விற்றது.
இதன் மூலம் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. தங்கத்திற்கு போட்டியாக நேற்று வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.234க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.34 லட்சத்துக்கும் விற்பனையானது. இதுவும் வெள்ளி விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் (நாளை), புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என்று அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருகிறது. இந்த நேரத்திலும், ஆண்டு இறுதியை நெருங்கும் நேரத்திலும் தங்கம், வெள்ளி விலை தினம் தினம் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை பதிவு செய்வது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக பெண்களை ரொம்ப கவலடைய செய்துள்ளது.
தங்கம் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், பெருமுதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தையே சார்ந்து இருப்பது, போர் பதற்றச் சூழல் இன்னும் சில நாடுகளில் முடிவுக்கு வராதது உள்ளிட்டவை முக்கியமானவையாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காண்கிறது” என்றனர்.
