×

7 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு லட்சத்தை தொட்டது தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: ஏழு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு லட்சத்தை தொட்ட தங்கம் விலையால் நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.95,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த திங்கட்கிழமை ரூ.99,000ஐ தாண்டியது. அதன்பிறகு அடுத்தடுத்த தேதிகளில் ரூ.1,00,000 ஆகவும், அடுத்த நாள் ரூ.1,00,040 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர். கடந்த 20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.20ம், பவுனுக்கு ரூ.160ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400க்கும், ஒரு பவுன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. இதன் மூலம் கடந்த 15ம் தேதிக்கு பின் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.5ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Tags : Chennai ,
× RELATED முட்டை விலை 640 காசாக உயர்வு