×

எந்த உணவை எப்படி சாப்பிடணும்?

நன்றி குங்குமம் டாக்டர்

ஆரோக்கிய வாழ்வுக்கு சமைத்த உணவுகள், சமைக்காத உணவுகள், பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிய மூன்று வகையான உணவுகளும் தேவை. எதை பச்சையாக எடுத்துக் கொள்வது. எதை அரை வேக்காட்டில் சாப்பிடுவது, எதை நன்கு சமைத்துச் சாப்பிடுவது என்பதில் பலருக்கும் பலவித குழப்பம் ஏற்படுகிறது.தானியம், பருப்பு போன்றவற்றை அப்படியே சாப்பிட்டால், அதனை செரிக்கும் சக்தி மனிதனுக்குக் கிடையாது. இந்த உணவுகளைச் சமைத்துச் சாப்பிடும் போது, நம் உடலில் உள்ள என்ஸைம்கள் மூலம் உணவு செரிக்கப்பட்டு சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கின்றன. சமைத்த உணவுகளில் கார்போ ஹைட்ரேட் அதிக அளவில் இருக்கும், இதுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறது.

சமைத்த உணவுகளை அனைவருமே சாப்பிடலாம். செரிமானத்துக்கு ஏற்றது. குறிப்பாக, எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நன்றாகச் சமைத்த உணவுகளே ஏற்றவை. உணவு நன்றாகச் சமைக்கப்படும்போது, நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை ஓரளவுக்கு உடலுக்குக் கிடைக்கும். வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் முதலான நுண்ணூட்டச் சத்துக்கள் குறைவாகவே கிடைக்கும். எனவே, பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள், சமைக்காத உணவுகள் போன்றவற்றைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

பச்சைப் பயிரை நீரில் ஊற வைத்து, அடுத்தநாள் முளைவிட்ட பிறகு பச்சையாகச் சாப்பிடுவதை பாதி பக்குவப்படுத்தப்பட்ட உணவு என்கிறோம். இந்த முறையில் தண்ணீரில் ஊற வைக்கப்படுவதால் பல புதிய நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு பாதாம்பருப்பில் புரதச்சத்து அதிகம், வைட்டமின் சி குறைவு, பாதாம்பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடும்போது, வைட்டமின் சி அதிகம் கிடைக்கும். பாதாம், பிஸ்தா முதலான நட்ஸ் வகைகளைத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.

முளைக்கட்டிய உணவில் பெரும்பாலும் புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். உடலுக்கு தேவையான ஆற்றலுக்கும் தசை வலுவுக்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். விலங்கு, தாவரம் முதலியவற்றில் இருந்து கிடைக்கும் உணவுகள் அனைத்துமே சமைக்காத உணவுகளே. ஆனால் இவற்றில் பெரும்பாலான உணவுகளை செரிமான பிரச்னையைத் தடுக்க, சமைத்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கும். எனினும் இலை, கிழங்கு வகைகளைத் தவிர்த்த மற்ற காய்கறிகளை நாம் சமைக்காமலேயே சாப்பிடலாம். சமைக்காத உணவுகளில்தான் நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுஉப்புகள் முதலான நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்திருக்கின்றன.

அரிசி, கோதுமை, துவரை முதலான பருப்பு வகைகள், வேர்க்கடலை போன்றவை தாமதமாகச் செரிமானமாகும். நட்ஸ் வகைகள், கீரைகள், மீன், இறைச்சி வகைகள், முட்டை, பால், கிரில்டு உணவுகள், சூப், ரசம், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றை சமைத்துதான் சாப்பிட வேண்டும். முளைகட்டிய பயறுகள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை பாதி பக்குவப்படுத்தி உண்ண வேண்டும். பனீர், சீஸ், வெண்ணெய், தயிர், அவல் பொரி, காய்கறிகள், பழங்கள், தேன், முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்கள், சாலட் ஆகியவற்றை அப்படியே சாப்பிடலாம்.

சரிவிகித உணவுகள்

நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளையே உடலுக்கு அளிக்கின்றன. மாறாக சரிவிகித உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கும்.நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டு வரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நொறுக்குத்தீனியில் உள்ள அதிக கொழுப்பால் உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம்.

துரித உணவுகள்

ஜங்க்புட் எனப்படும் துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவற்றின் தீமைகளைப் பற்றி குழந்தைகளுக்கு தெளிவாக விளக்கிக் கூற வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக மாறி, நொறுக்குத் தீனிகள் உட்கொள்வதை பார்க்கிறோம். அதைத் தவிர்க்க வேண்டும்.

ஆசைக்காக எப்போதாவது கொஞ்சம் நொறுக்குத்தீனியைத் கொறிப்பதில் தவறில்லை. ஆனால், அதையே அன்றாட வழக்கமாக்கிக் கொண்டால், குறிப்பாக தொலைக்காட்சி, சினிமா பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத்தீனி சாப்பிட்டால், துன்பத்தை நாமே விலை கொடுத்து வாங்குவது போலத்தான். தொடர்ச்சியான அதிக அளவிலான நொறுக்குத் தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைத்துவிடும் என்பதை நாம் உணர்ந்து குழந்தைகளுக்கும் உணர்த்தி வழிநடத்திட வேண்டும்.

தொகுப்பு: பாலசர்மா

Tags : Dr. ,Healthy ,living ,
× RELATED கவுன்சலிங் ரூம்