×

கர்ப்ப காலத்தில் இதய ஆரோக்கியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

இதயமே… இதயமே… ஹெல்த் கைடு!

கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு பெண்ணின் இதயத்திற்கு மிகப்பெரிய சவாலான காலகட்டமாகும். இக்காலத்தில் ரத்தத்தின் அளவு கிட்டத்தட்ட பாதியளவு அதிகரிக்கிறது; கருப்பையில் வளரும் குழந்தைக்கு ரத்த ஓட்டத்தை உறுதி செய்ய இதயத் துடிப்பும், இதயத்தின் செயல்பாடும் (Cardiac output) அதிகரிக்கின்றன. ஆரோக்கியமான இதயம் கொண்ட பெண்களுக்கு இந்த மாற்றங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால், ஏற்கனவே இதய நோய் அல்லது வேறு ஏதேனும் வளர்சிதை மாற்ற உடல்நலப் பிரச்னைகள் இருக்கும்போது, கர்ப்பகாலத்தில் ஏற்படும் இதே மாற்றங்கள் இதயச் செயலிழப்பைத் [decompensation] தூண்டக்கூடும். இதனால்தான் இப்பொழுது மகப்பேறு மருத்துவர்களும், இதய நிபுணர்களும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கண்காணிப்பது போலவே, கர்ப்பிணிகளின் இதய ஆரோக்கியத்தையும் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.

இந்தியாவில் மாறிவரும் அபாயங்கள்

இன்றையச் சூழலில், இந்தியாவில் பெண்கள் தாங்கள் கர்ப்பம் தரிப்பதை சற்றே தள்ளிப்போட்டு, வயது அதிகரித்த பின்பு கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்தரிக்கும்போது, பலருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்ட் பிரச்னை அல்லது அதிக உடல் எடை போன்ற பாதிப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில், வாதக் காய்ச்சலால் ஏற்படும் ருமாட்டிக் இதய நோய் (Rheumatic heart disease) இன்றும் இருபது மற்றும் முப்பது வயதுகளில் உள்ள பல பெண்களை பாதிக்கிறது. கர்ப்பகாலப் பரிசோதனைகளில் இதய வால்வு சுருக்கம் (Mitral valve stenosis) மற்றும் வால்வு கசிவு [regurgitation] போன்ற பிரச்னைகள் கண்டறியப்படுவது இன்றும் தொடர்கிறது.

அதுமட்டுமின்றி, சிறுவயதில் பிறவி இதயக் குறைபாடுகளுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, தற்போது நலம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை அடைந்த பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.அதிகப்படியான ரத்தப்போக்கு [haemorrhage] மற்றும் தொற்றுகளால் ஏற்படும் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைந்து வரும் வேளையில், இதய நோய்கள் தாய்மார்களின் இறப்புக்கும், உடல்நல பாதிப்புக்கும் ஒரு முக்கிய மறைமுகக் காரணமாக மாறி வருகின்றன. குறிப்பாக, கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் (Pre-eclampsia) போன்றவை வெறும் கர்ப்பகாலச் சிக்கல்கள் மட்டுமல்ல; அவை எதிர்காலத்தில் வரக்கூடிய இதய நோய்களுக்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகளாகவே இப்போது பார்க்கப்படுகின்றன.

உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள்

மருத்துவ நடைமுறையில் மூன்று விதமான பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன:

1.இதய அமைப்பு சார்ந்த நோய்கள் [structural heart disease]

குறிப்பாக கர்ப்பத்தின் பிற்பகுதியிலும், பிரசவ நேரத்திலும் ருமாட்டிக் வால்வு பிரச்னைகள் மற்றும் பிறவி இதயக் குறைபாடுகள் [rheumatic valve lesions & congenital heart disease] போன்றவை இதயச் செயலிழப்பு, சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் ரத்த உறைவு [thromboembolism] போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம். பல பெண்களுக்கு, கர்ப்பத்தின் 6 அல்லது 7-வது மாதத்தில் மூச்சுத் திணறல் அல்லது கை, கால் வீக்கம் ஏற்படும் வரை தங்களுக்கு இப்படியொரு பிரச்னை இருப்பதே தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.கர்ப்பகாலப் பிரச்னைகள் [pregnancy-specific conditions]

உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால சர்க்கரை நோய் மற்றும் கடுமையான ரத்த சோகை [hypertensive disorders, gestational diabetes, significant anaemia] ஆகியவை இதயத்தின் மீதும், ரத்த நாளங்கள் மீதும் கூடுதல் சுமையை ஏற்றுகின்றன. ப்ரீ-எக்ளாம்ப்சியா (Pre-eclampsia) அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பத்தை, பிற்கால வாழ்க்கையில் ஏற்படப்போகும் இதய நோய்க்கான ஒரு எச்சரிக்கை மணியாகவே கருத வேண்டும்.

3.பெரிபார்டம் கார்டியோமயோபதி (Peripartum Cardiomyopathy)

இது அரிதானது என்றாலும், கர்ப்பத்தின் கடைசி மாதத்திலோ அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய சில மாதங்களிலோ திடீரென ஏற்படலாம். இதயத் தசை பலவீனமடையும் இந்நிலையை, சாதாரண சோர்வு என்று அலட்சியப்படுத்தக் கூடாது. படுக்கும்போது மூச்சுத் திணறல், கடும் சோர்வு மற்றும் கால்களில் வீக்கம் இருந்தால் உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும்.

உடனடியாக கவனம் தேவைப்படும் அறிகுறிகள்

தொடர்ச்சியான அல்லது அதிகரித்துக் கொண்டே போகும் மூச்சுத் திணறல், வழக்கமான வேலைகளைச் செய்ய முடியாத நிலை, நேராகப் படுக்க முடியாமல் மூச்சு முட்டுவது, இரவு நேர இருமல், நெஞ்சு வலி அல்லது அசௌகரியம், மிக வேகமான அல்லது சீரற்ற இதயத் துடிப்பு (Palpitations), முகம் அல்லது கால்களில் திடீர் வீக்கம் மற்றும் மயக்கம் போன்றவை ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

வாதக் காய்ச்சல் [rheumatic fever], வால்வு அறுவைசிகிச்சை செய்தவர்கள், இதயத் தசை நோய் அல்லது நீண்ட கால ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு இது மிக மிக அவசியம். ‘சற்று பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று அலட்சியமாக இருப்பதை விட, ஒரு எக்கோ (Echocardiography) பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

முறையான சிகிச்சை அணுகுமுறை அவசியம்

இதய நோய் இருப்பது ஏற்கனவே தெரிந்த பெண்கள், கருத்தரிப்பதற்கு முன்பே மருத்துவ ஆலோசனை பெறுவது (Pre-conception counselling) மிகச் சிறந்தது. மருந்துகளை மறுஆய்வு செய்வது, தேவைப்பட்டால் வால்வு சிகிச்சை மேற்கொள்வது மற்றும் எந்த மருத்துவமனையில், என்ன முறையில் பிரசவம் பார்ப்பது என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது தாயும் சேயும் நலம் பெற உதவும்.

பிரசவத்தைத் திட்டமிட வேண்டும்

திட்டமிடாத கர்ப்பமாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் இதய நோய் வரலாற்றைத் தெரிவிப்பது அவசியம். இது மகப்பேறு மருத்துவர், இதய நிபுணர் மற்றும் மயக்கவியல் நிபுணர் ஆகியோர் இணைந்து செயல்படவும், அவசர சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவத்தைத் திட்டமிடவும் உதவும்.

மாதாந்திர பரிசோதனைகள் மற்றும் நீண்ட கால ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்

அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் முறையான மாதாந்திரப் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைப்பது, ரத்த சோகையைச் சரி செய்வது, புகையிலையைத் தவிர்ப்பது மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய கண்காணிப்பு ஆகியவை இதயப் பாதுகாப்பின் முக்கியத் தூண்களாகும். கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் அல்லது பெரிபார்டம் கார்டியோமையோபதி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, pre-eclampsia, gestational hypertension, gestational diabetes, peripartum cardiomyopathy] எதிர்காலத்தில் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள் நீண்ட காலத்திற்குத் தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.

இன்றைய மருத்துவச் சூழலில், கர்ப்பகால இதய ஆரோக்கியம் என்பது தாய் மற்றும் அவரது குடும்பத்தினரின் மனதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்கக்கூடாது. நவீன பரிசோதனை வசதிகள் பெருகியுள்ள இந்தியாவில், ஒரு கர்ப்பிணித் தாயின் இதய நலத்தைக் கண்காணிப்பதும், பராமரிப்பதும் முற்றிலும் சாத்தியமான ஒன்று. நம் நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான அடுத்தக்கட்ட முக்கியமான நடவடிக்கை இதுவேயாகும்.

தொகுப்பு: இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது

Tags : Saffron Dr. ,
× RELATED மரவள்ளிக் கிழங்கின் மருத்துவ மகத்துவம்!