×

மஞ்சூரில் பகலில் சுட்டெரிக்கும் வெயில் இரவில் உறைய வைக்கும் பனி

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் உறைய வைக்கும் பனியால் கடும் குளிர் நிலவி வருகிறது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்தாண்டு துவக்கம் முதல் பெரும்பாலான நாட்களிலும் மழையின் தாக்கம் காணப்பட்டது.

தொடர்ந்து தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருமழை, இடை, இடையே பல்வேறு புயல்களின் தாக்கம் காரணமாகவும் நல்ல மழை பொழிவு காணப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாத இறுதியில் பனி விழத்துவங்கியது. சுமார் 2 மாதங்கள் கடந்த நிலையில் பனியின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.

மஞ்சூர் அருகே உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கோரகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உறைபனி கொட்டுகிறது. மாலை 3 மணிக்கு பனி விழத்துவங்கி மறுநாள் காலை 9 மணி வரை பனியின் தாக்கம் உள்ளது. மேலும், பகல் வேளைகளில் சமவெளி பகுதிகளுக்கு இணையாக வெயில் சுட்டெரிக்கிறது.

பகல் நேர வெயில் இரவு வேளைகளில் உறையவைக்கும் பனியின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் பனியால் கருக துவங்கியுள்ளது. வனப்பகுதிகளிலும் செடி, கொடிகள் புல் வெளிகள் காய்ந்துள்ளது. உறைபனி காரணமாக காலை நேரங்களில் புல்வெளிகள் பனித்துகள்களால் வெள்ளையாக காட்சியளிக்கிறது.

Tags : Manjoor ,Nilgiris district ,
× RELATED தமிழக மீனவர்களை விடுக்க தேவையான...