×

4.18 லட்சம் பேர் எழுதினர் குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்

சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகள், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகள் என மொத்தம் 828 காலி பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடந்தது. 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் முதன்மை தேர்வை எழுத தகுதி பெற்றவர்களாக குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித்தாள் தேர்வு அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 8ம் தேதி காலையிலும், அதே நாள் குரூப்-2ஏ பதவிகளுக்கான தாள்-2 (பொதுப்பாடம்) தேர்வு பிற்பகலிலும், அதனை தொடர்ந்து குரூப்-2 பதவிகளுக்கான தாள்-2 தேர்வு (பொதுப்பாடம்) பிப்ரவரி 22ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கு இன்று (செவ்வாய்) முதல் 29ம் தேதி (திங்கட்கிழமை) வரை விண்ணப்பிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.

* மொத்தம் 828 காலி பணியிடங்கள்.
* 4 லட்சத்து 18 ஆயிரம் பேர் எழுதினர்.
* தேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* முதன்மைத் தேர்வு வருகிற பிப்ரவரி 8ம் தேதி காலை, பிற்பகல் என 2 தேர்வுகள் நடைபெறுகிறது.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,
× RELATED அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி...