- தம்பரம் ஆர்.டி.ஓ.
- வண்டலூர்
- தாம்பரம்
- மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம்
- ஸ்டேட் பாங்க் காலனி
- மேற்கு தாம்பரம் - தர்காஸ்
தாம்பரம்: மேற்கு தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலையில், பழைய ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில், மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின், தாம்பரம் யூனிட் அலுவலகம் கடந்த 2008ம் ஆண்டு துவங்கப்பட்டு இயங்கி வந்தது. அப்போது அந்த யூனிட் அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகளாக முதல் நிலை ஆய்வாளர், 2ம் நிலை ஆய்வாளர், ஒரு கண்காணிப்பாளர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் மூலம் எல்எல்ஆர், லைசென்ஸ், வாகனங்கள் பதிவு, பெயர் மாற்றம், எப்சி, பேஜ் போன்ற பணிகள் அந்த அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. வாகனங்களுக்கு பர்மிட் வாங்குவது உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பந்தமான பணிகள் அனைத்திற்கும் பொதுமக்கள் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் நிலை இருந்து வந்தது.
இதனால் மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, செம்பாக்கம், சிட்லபாக்கம், சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் புதிதாக உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு, 2012ம் ஆண்டு முதல் தாம்பரம் யூனிட் அலுவலகம் இயங்கி வந்த அதே கட்டிடத்தில் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து புதிய அலுவலகம் இயங்கத் தொடங்கி தொடர்ந்து தற்போது வரை இயங்கி வருகிறது.
இங்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், எல்எல்ஆர் பெறுவதற்கு வருகின்றனர்.
அதேபோல 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் எப்சி செய்வதற்காகவும், பர்மிட் பெறுவதற்காகவும் வருகிறது. இதுதவிர இந்த அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 460க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பேருந்துகள், இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தாம்பரத்தில் முக்கிய பகுதியில் இந்த அலுவலகம் இயங்கி வருவதால் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் எளிதாக இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அலுவலகம் இயங்கி வரும் கட்டிடத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை அமர வைப்பதற்கு தேவையான இடவசதிகூட இல்லாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், அலுவலர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை மேற்கு தாம்பரம் பகுதியில் இருந்து வண்டலூர் பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக வண்டலூர் – படப்பை பிரதான சாலையில், மேம்பாலம் இறங்கும் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அந்த கட்டிடம் இறுதி செய்யப்பட்ட உடனே மேற்கு தாம்பரம் பகுதியில் இருந்து தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் வண்டலூர் பகுதிக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. மேற்கு தாம்பரம் பகுதியில் இருந்து வண்டலூர் பகுதிக்கு தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மாற்றப்பட உள்ள நிலையில் இதற்கு பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் எளிதாக வந்து சென்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து புதிதாக ஒரு இடத்திற்கு அலுவலகத்தை மாற்றுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும், வாடகை கட்டிடத்திற்கு அலுவலகத்தை மாற்ற முயற்சி எடுப்பதற்கு பதிலாக தாம்பரம் பகுதியிலேயே உள்ள அரசு நிலங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு நிரந்தரமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைத்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் எனவும், தற்போது அலுவலகத்தை மாற்றும் எண்ணத்தை அதிகாரிகள் மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. தற்போது இயங்கி வரும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தாம்பரம்,
கடப்பேரி, இரும்பலியூர், முடிச்சூர், பெருங்களத்தூர், நெடுங்குன்றம், சேலையூர், சிட்லபாக்கம், செம்பாக்கம், கவுரிவாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகன பதிவு, லைசென்ஸ், எல்எல்ஆர் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது மக்கள் தொகை அதிகரித்து உள்ளதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து தாம்பரம் பகுதிக்கு பொதுமக்கள் வருவதற்கு சிரமப்படுவதாலும் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை, மேற்கு தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கிழக்கு தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என இரண்டாக பிரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான கோப்புகளை அரசுக்கு அனுப்பி உள்ளனர். அந்த கோப்புகளுக்கு அரசு ஒப்புதல் தரும் பட்சத்தில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இரண்டாக பிரிக்கப்படும்.
இதில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் மேற்கு பகுதியில் இருக்கும் தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், கடப்பேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிலும், சில பகுதிகள் குன்றத்தூர், பெரும்புதூர், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லவும், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் மேற்கு தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிற்கும் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கிழக்கு பகுதியில் இருக்கும் கிழக்கு தாம்பரம், சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், குரோம்பேட்டை, செம்பாக்கம், சேலையூர், கௌரிவாக்கம் பகுதிகள் கிழக்கு தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், இதில் சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிற்கு சில பகுதிகள் செல்லலாம் எனவும், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகள் கிழக்கு தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிற்கு வரலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொந்த கட்டிடம் எப்போது?
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் புதிதாக 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது பாட்டப்பசாமி என்பவர் வட்டார போக்குவரத்து அலுவலராக நியமிக்கப்பட்டார்.
அப்போதிலிருந்து அலுவலகத்திற்கு என சொந்தமான இடம் வேண்டுமென கோரிக்கையை விடுக்கப்பட்டது. ஆனால் அவரைத் தொடர்ந்து பலர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பொறுப்புக்கு வந்தும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமாக இடம் ஒதுக்கப்படவில்லை.
இடம் தேர்வு செய்வதில் அலட்சியம்…
ஆர்டிஓ அலுவலக மாற்றம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சொந்த கட்டிடம் இல்லாமல் நெருக்கடியான நிலையிலேயே அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைத்து வாகனங்களையும் அலுவலக வளாகத்தில் வைத்து ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளதால் வெவ்வேறு இடங்களில் வைத்து ஆய்வு செய்யும் நிலை உள்ளது. சொந்த இடத்தில் அலுவலகம் அமைப்பதற்கு 4 முதல் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை எதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. அலுவலகத்திற்கான சரியான இடத்தை தாம்பரம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தேர்வு செய்து தர வேண்டும்,’ என்றார்.
விபத்துகள் அதிகரிக்கும்
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தாம்பரத்தில் இருந்து வண்டலூர் பகுதிக்கு மாற்றுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடம் வண்டலூர் – படப்பை பிரதான சாலையில் மேம்பாலம் இறங்கும் பகுதியில் உள்ளது. இதனால் மேம்பாலத்தில் இருந்து படப்பை நோக்கி கீழே இறங்கும் வாகனங்கள் எப்போதும் அதிவேகமாகவே வரும் நிலை உள்ளது. அலுவலகம் அங்கு மாற்றப்பட்டால் மேம்பாலத்தில் இருந்து படப்பை நோக்கி செல்லும் வாகனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிக்கி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அலுவலகத்தை மாற்ற முடிவு செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதியில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
