சத்தியமங்கலம், டிச.22: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் விவசாயிகள் வாழை, கரும்பு, மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் நுழைந்து விவசாய தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்திற்குள் நுழைந்தன. யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் விவசாயிகளுடன் இணைந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
