வாஷிங்டன்: அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்களில் இருந்து, டிரம்ப் இடம்பெற்றுள்ள புகைப்படம் உள்ளிட்ட 16 முக்கிய கோப்புகள் திடீரென நீக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து வகைப்படுத்தப்படாத ஆவணங்களையும், ‘எப்ஸ்டீன்’ கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் கடந்த 19ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், அமெரிக்க நீதித்துறையின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக ‘எப்ஸ்டீன் நூலகம்’ என்ற பெயரில் பல்வேறு ஆவணங்கள் பதிவேற்றப்பட்டன. இதில் எப்ஸ்டீனின் வீட்டில் இருந்த மேசை ஒன்றின் திறந்த டிராயருக்குள், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியா, எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இருக்கும் புகைப்படமும், டிரம்ப் வேறு சில பெண்களுடன் நீச்சலுடையில் இருக்கும் மற்றொரு புகைப்படமும் இருந்ததற்கான சான்றுகள் இணையதளத்தில் வெளியாகின.
இந்நிலையில், ஆவணங்கள் வெளியிடப்பட்ட மறுநாளே இணையதளத்தில் இருந்த வரிசை எண்களில் மாற்றம் ஏற்பட்டு, டிரம்ப் தொடர்பான அந்த புகைப்படம் மற்றும் நிர்வாண ஓவியங்கள் உட்பட குறைந்தது 16 கோப்புகள் திடீரென நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ள அமெரிக்க நீதித்துறை, ‘பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மறுஆய்வு செய்யவே இவை நீக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இது உண்மையை மறைக்கும் முயற்சி என ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ‘இது ஒரு மூடிமறைப்பு வேலை’ என நாடாளுமன்ற மேற்பார்வை குழுவும் கடுமையாக விமர்சித்துள்ளது.
