×

குளிர் கால நோய் பாதிப்பு: 30% கடந்த 1 மாதத்தில் அதிகரிப்பு; நுரையீரல் பிரிவில் அதிகரிக்கும் மருத்துவ பயனாளிகள் முகக்கவசம் அணிய வேண்டும்; மருத்துவர்கள் தகவல்

* சிறப்பு செய்தி
குளிர்கால நோய் பாதிப்பால் நுரையீரல் பிரிவில் அதிகரிக்கும் மருத்துவ பயனாளிகள், கடந்த 1 மாதத்தில் 30 சதவீதம் பேர் அதிகரித்துள்ளது. குளிர்காலம் தொடங்கியதும் பலருக்கும் சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்னைகள் தொடங்கிவிடுகின்றன. காற்றின் குளிர்ச்சி, மாசுபாட்டின் அதிகரிப்பு மற்றும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் இந்த பிரச்னைகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகம் பாதிக்கின்றன. இந்த ஆண்டு, இந்தியாவின் பல பகுதிகளில் குளிர்கால சுவாச நோய்கள் 20-30 சதவீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால், காற்று உலர்ந்து போகிறது. இது சுவாசப்பாதையை எரிச்சலூட்டி, வைரஸ் தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், மக்கள் உள்ளேயே அதிக நேரம் செலவிடுவதால், வைரஸ்கள் எளிதில் பரவுகின்றன. காற்று மாசுபாடு, குறிப்பாக பிஎம் (PM)2.5 போன்ற நுண்துகள்கள், நுரையீரலை பாதித்து, இருமல் மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகின்றன. குளிர்காலத்தில் காற்றின் குளிர்ச்சி, அதிக மாசுபாடு, சுவாசப்பாதையை பாதிக்கும் வைரஸ் தொற்றுகள் போன்றவற்றால் மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்புகள் கணிசமாக அதிகரிக்கின்றன.

இதுபோன்ற நேரத்தில் இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை சாதாரணமானது என்று புறக்கணித்தால், ஆர்எஸ்வி, சிஒபிடி எனப்படும் தீவிரமான நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் நீண்டகால நுரையீரல் சேதம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். மேலும் குறிப்பிட்ட சில வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழலானது மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்துவதால் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் காற்று சீராக உள்ளே செல்லமுடியாத நிலை ஏற்படுவதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். இதனை ஆஸ்துமா என்கின்றனர். குளிர்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால் நிலைமை மோசமாகிறது. தற்போது மருத்துவமனை நுரையீரல் புறநோயாளிகள் பிரிவில் கடந்த 1 மாதமாக 30 சதவீதம் வரை ஆஸ்துமா மருத்துவ பயனாளிகள் வழக்கத்தை விட அதிகரித்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக காவேரி மருத்துவமனை நுரையீரல் சிறப்பு மருத்துவர் செல்வி கூறியதாவது: குளிர் காலத்தில் பொதுவாக அனைத்து வகையான வைரஸ் நோய்களும் பரவும், குறிப்பாக ப்ளூ வைரஸ், ரைனோ வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான வைரஸ் இந்த குளிர் காலத்தில் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ரைனோவைரஸ் என்பது மனிதர்களுக்கு பொதுவான சளியை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும், இது மேல் சுவாசக்குழாயைப் பாதிக்கிறது, காற்றில் பரவும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல ஆர்எஸ்வி (Respiratory Syncytial Virus) பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாக பரவி வருகிறது. சுவாச தொற்று நோயாக உள்ள இந்த ஆர்எஸ்வி பொதுவாக காய்ச்சல், சளி, இருமல், பசியின்மை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சில அறிகுறிகளுடன் தென்படும். இது சுவாசப்பாதையில் தொற்று நோயை உருவாக்கும். வயதானவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்து வீட்டிற்கு சென்றாலும் கிட்டத்தட்ட 1 மாதம் வரை இருமல் இருக்கும்.

ஆஸ்துமா நுரையீரல் பிரச்னை இருக்கும் நபர், இந்த குளிர் காலத்தில் அதிக அளவில் பாதிப்பு அடைவார்கள். தற்போது நுரையீரல் சிகிச்சை பிரிவு அதிக அளவில் மக்களால் நிரம்பி வருகிறது. இதில் கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வெயில் காலத்தில் சாதாரணமாக இருப்பார்கள், ஆனால் குளிர் காலத்தில் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் அதிகரித்து சிகிச்சைக்காக வருவார்கள். மொத்தமாக 30 லிருந்து 40 சதவீதம் வரை நுரையீரல் பிரச்னையோடு மருத்துவமனைக்கு வருவது அதிகரித்து உள்ளது.

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் அதிகாலையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் செல்ல வேண்டும் என்ற முக கவசம் அணிந்திருக்க வேண்டும். இளம் வயதினர் உடையவர்கள் சளி, காய்ச்சல் ஏற்பட்டால் விரைவில் குணமடைந்து விடும். இருப்பினும் 5% அது தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளது. 2 முதல் 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இணை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* குளிர்கால நோய்கள்
குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் (ப்ளூ), நிமோனியா போன்ற சுவாச நோய்கள், ஆஸ்துமா மற்றும் சிஓபிடி போன்ற கடுமையான சுவாச நோய்கள் மற்றும் சொறி, அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நோய்கள் ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் மக்கள் வீட்டிற்குள்ளேயே அதிக நேரம் செலவிடுவதாலும், வைரஸ்கள் எளிதில் பரவுவதாலும் இந்த நோய்கள் அதிகரிக்கின்றன.

* வைரஸ் தடுக்கும் முறைகள்
கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுங்கள் அல்லது சானிடைசர் பயன்படுத்த வேண்டும். இருமல் அல்லது தும்மல் வரும்போது வாயை டிஷ்யூ பேப்பர் அல்லது முழங்கையால் மூட வேண்டும். நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பை தவிர்க்க வேண்டும். போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு எடுக்கவும். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.

* நடமாடும் மருத்துவ குழுக்கள்
பனிப்பொழிவு மற்றும் மழைப் பொழிவுக்கு பிறகு இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், சுவாச பாதிப்பு, டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு, எலிக் காய்ச்சல், பாக்டீரியா தொற்று, சேற்றுப் புண், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதை கருத்தில் கொண்டு தமிழக பொது சுகாதாரத்துறை நோய் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து நோயின் தன்மையை வகைப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான வசதிகள் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைத்து சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தேர்தல் கமிஷன் போட்ட குண்டு: எஸ்ஐஆர்...