×

போலீசாரை தள்ளிவிட்ட விவகாரம் காங்கிரஸ் பெண் தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் போலீசாரை தாக்கியதாக காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தடையை மீறி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் போராட்டக்காரர்களை அல்கா லம்பா அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தினரைத் தூண்டிவிட்டது, பொதுச் சாலையை மறித்தது மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் அஸ்வனி பன்வார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அதனைப் பார்வையிட்ட நீதிபதி, ‘அல்கா லம்பா போராட்டத்தின் முன்னணியில் நின்று தடுப்பு வேலிகளைத் தாண்டுவதையும், பெண் போலீசாரை தள்ளிவிடுவதையும் வீடியோ காட்சிகள் பூர்வாங்கமாக உறுதிப்படுத்துகின்றன’ என்று சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் அமைதியான முறையில் நடந்தது என்றும், போலீசாரை தாக்கவில்லை என்றும் கூறி அல்கா லம்பா தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கை தொடர்ந்து நடத்தப் போதுமான முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், உத்தரவை மீறுதல், பொது வழிக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் அல்கா லம்பா மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீதான விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Tags : Congress ,Delhi court ,New Delhi ,Alka Lamba ,Delhi ,Jantar Mantar ,Delhi… ,
× RELATED மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்...