தென்காசி, டிச.20: தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் சிறப்பு முகாம்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் இன்று (20ம்தேதி) நாளை (21ம்தேதி) காலை 9 முதல் மாலை 5மணி வரை நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் புதிய வாக்காளர்களுக்கு படிவங்கள் (படிவம் 6, நீக்கல் மற்றும் ஆட்சேபனைக்கான படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 8) ஆகியவை வழங்கியும், அவற்றை நிரப்புவதற்கும் உதவி செய்வார்கள். எனவே 01.01.2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியானவர்களும் தங்கள் பகுதி வாக்குச்சாவடி அமைவிடங்களில் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து உறுதி மொழிப்படிவத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து வழங்கிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

