×

குப்பைகளை அகற்றக்கோரி பூ மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 19: திருப்பூர் பெருமாள் கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாநகராட்சி பூ மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்லடம், அவிநாசி, காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து சிறுவியாபாரிகள் பூக்களை விற்பனைக்காக மொத்தமாகவும், பொதுமக்கள் சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு கூடுகின்றனர்.

இதன் அருகே மாநகராட்சி இடத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. கோர்ட் உத்தரவுப்படி சின்னகாளிபாளையத்தில் கடந்த 2 நாட்களாக மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்படுகிறது. ஆனால் பூமார்க்கெட் பகுதியில் கொட்டிய குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனை கண்டிக்கும் விதத்தில் நேற்று சங்கத் தலைவர் சுலைமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் கூறுகையில், பூ மார்க்கெட் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூ மார்க்கெட்டின் முன்புறமும், பின்புறமும் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக குப்பைகள் தேங்கியதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வியாபாரம் நடக்காததால் கடைகளுக்கான வாடகையை கட்டமுடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே இங்கிருந்து குப்பையை உடனே அகற்ற வேண்டும். இல்லை என்றால் மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரமான வேறு இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், பூ வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruppur ,Tiruppur Perumal Temple ,Palladam ,Avinashi ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்