- தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்
- எம்பிபிஎஸ்
- ஐக்கிய மாநிலங்கள்
- சென்னை
- தமிழ்நாடு மருத்துவ சபை
- மத்திய குற்றவியல் பொலிஸ்
சென்னை: அமெரிக்காவில் டாக்டர் படித்ததாக போலி சான்றிதழ்கள் மூலம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சலில் பதிவு செய்த 2 பேர் மீது தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அளித்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் பதிவாளர் செந்தில்வடிவு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் கடந்த மாதம் 24ம் தேதி கடலூர் மாவட்டம் சி.என்.பாளையம் நடுச்சத்திப்பட்டு பகுதியை சேர்ந்த அஜித்சம்சன் மற்றும் ராமநாதபுரம் பரமக்குடி முருகன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பையா கணபதி ஆகியோர், தாங்கள் அமெரிக்காவில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவுக்காக சமர்ப்பித்தனர். பின்னர் இருவரும் அளித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, இருவரும் அமெரிக்காவில் எம்.பி.பி.எஸ் படிக்கவில்லை என்றும், இருவரும் அமெரிக்காவில் எம்.பி.பி.எஸ் படித்ததாக போலியான ஆவணங்களை மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்ய அளித்து சென்றது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட 2 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
புகாரின்படி போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவணம் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமெரிக்காவில் டாக்டர் படித்ததால் போலி சான்றிதழ்கள் பதிவு செய்த அஜித் சம்சன் மற்றும் கருப்பையா கணபதி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
