டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்து. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் மசோதா மீதான விவாதத்தை ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், 100 நாட்கள் வேலை என்பது, 125 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சார்பில் 60 சதவீதம் நிதி வழங்கப்படும். முன்னதாக 90 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், இனி குறைவாக வழங்கப்படும். மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களவையில் கடந்த இரண்டு நாள்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை விவாதத்தின் போது பதிவிட்டனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்வந்து முற்றுகையிட்டனர். சில எம்பிக்கள் மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்த நிலையில், “மக்கள் உங்களை மசோதாக்களைக் கிழிப்பதற்காக அனுப்பவில்லை, உங்களின் செயல்பாடுகளை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
தொடர்ந்து மக்களைவை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். நாளை காலை 11 மணிக்கு மக்களைவை மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
