×

காச நோயாளிகள் கவனம்; மருந்துகள் இடைநிற்றல் தவிர்க்கப்பட வேண்டும்: மருத்துவ அதிகாரி எச்சரிக்கை

மதுரை, டிச. 18: காச நோயான டிபி பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர், இடையில் மருந்துகளை விட்டுவிடுவதால் அதன் தீவிரம் அதிகரித்து உயிர் பாதிப்பிற்கு ஆளாகும் ஆபத்து இருப்பதாக, மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒரு காலத்தில் காச நோயான டிபி பாதிப்பு என்பது, உச்சக்கட்ட உயிர் பறிக்கும் நோய் பட்டியலில் இருந்தது. தற்போது இதற்கென மருந்துகள் முறையாக தொடர்ந்து எடுத்துக் கொண்டால், இந்த தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையும் நிலை உள்ளது. ஆனால், காசநோயாளிகளில் சிலர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ளாதது, நோயின் தீவிரத்தில் சிக்கி பெரும் பாதிப்பிற்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்துகிறது.

இடையில் மருந்துகளைத் தவிர்ப்பது சிகிச்சையின் காலத்தை நீட்டிக்கிறது. அத்தோடு நோயாளியின் உயிருக்கே ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. சிகிச்சை பெற்ற முதல் இரு மாதங்களுக்குள் பல நோயாளிகள் முற்றிலும் அறிகுறியற்றவர்களாக, குணமடைந்ததாக உணரத் துவங்குகின்றனர். இதனால் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இவ்வகையில், மதுரை மாவட்ட சுகாதாரத்துறை கணக்கீட்டின்படி, கடந்த 2021ல் 4,240 காசநோய் பாதித்த நோயாளிகளில் தொடர் சிகிச்சையை விட்டு 95 பேர் வெளியேறியுள்ளனர். 2022ல் 4,279 காசநோய் நோயாளிகளில் 129 பேரும், 2023ல் 5,443 காச நோயாளிகளில் 85 பேரும், 2024ல் 5,667 காசநோயாளிகளில் 55 பேரும் சிகிச்சையை விட்டு வெளியேறி, தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மதுரை, மருத்துவ சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜசேகரன் கூறும்போது, ‘‘காசநோய்க்கான தொடர் சிகிச்சையை நிறுத்துவதால் நோயாளிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற விஷயங்களில் நாங்களும் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். ஏனெனில் இது சுகாதாரத் துறைக்கு மட்டுமல்ல, நோயாளிகளின் நல்வாழ்விற்கும் பெரும் சவாலாகும். காசநோய் கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்கள், பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையைப் பின்பற்றினாலும், சிலர் 2 மாதங்களுக்குப் பிறகு தவறாக தாம் நலமடைந்து விட்டதாக நினைத்து தொடர்ந்து மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தி விடுகின்றனர்.

இவர்கள் தாங்கள் குணமடைந்துவிட்டதாகவும், இனி சிகிச்சை பெறத் தேவையில்லை என்றும் நம்புகின்றனர். எனவே, இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து இவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, மீண்டும் அவர்களை தொடர் சிகிச்சைக்குள் கொண்டுவர தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு முழுமையாக மருந்துகளை எடுத்துக்கொள்வது மட்டுமே, பூரண நலத்தை நோயாளிகளுக்கு வழங்கும் என்ற விழிப்புணர்வு அவசியம்’ என்றார்.

Tags : Madurai ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது